குழப்பம் ஏற்படுத்தும் சந்தர்ப்பவாதி: சைதை துரைசாமி மீது கே.பி.முனுசாமி காட்டம்

15

கிருஷ்ணகிரி: 'சைதை துரைசாமி வேலை வெட்டி இல்லாதவர். செங்கோட்டையன் கட்சி முன்னோடி,' என, அ.தி.மு.க., துணை பொதுச்செயலாளர் முனுசாமி கூறினார்.

கிருஷ்ணகிரி, குருபரப்பள்ளி, குந்தாரப்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட, அ.தி.மு.க., சார்பில் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது. அதில் கலந்து கொண்ட அக்கட்சியின் துணை பொதுச் செயலாளர் முனுசாமி எம்.எல்.ஏ., நிருபர்களிடம் கூறியதாவது:
வக்ப் திருத்தச் சட்டம் இஸ்லாமியர்களின் சொத்தை பாதுகாப்பதாக மத்திய அரசு கூறுகிறது. ஆனால் ராஜ்யசபாவில் எங்கள் எம்.பி.,க்கள் இன்னும் விரிவாக ஆய்வு செய்து இஸ்லாமியர்களை பாதுகாக்கும் வகையில் வக்ப் திருத்த சட்டம் இருக்க வேண்டும் என அ.தி.மு.க., சார்பில் வலியுறுத்தினர். அந்த அடிப்படையிலேயே சட்டசபையில், வக்ப் திருத்த சட்டத்திற்கு எதிராக, தி.மு.க., அரசு கொண்டுவந்த தீர்மானத்தை ஆதரித்தோம்.


ராஜ்யசபாவில் எதிர்த்து ஓட்டளித்தோம்.
தி.மு.க., எதிர்ப்பாளர்கள் அனைவரும் ஒன்று சேர வேண்டும் என்ற சைதை துரைசாமி கருத்துக்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது. இதற்கு காரணம், அவரை எதிர்ப்பவர்கள் அனைவரும் அ.தி.மு.க.,வில் முழுமையாக ஆட்படுத்திக்கொண்டு உடல், பொருள், ஆவி, உழைப்பு, என வியர்வை சிந்தி உழைப்பவர்கள்.
ஆனால் சைதை துரைசாமி ஏதோ ஒரு காலத்தில் சில பதவிகளை அனுபவித்து விட்டு, வேலை வெட்டி இல்லாமல் உள்ளார். அவருக்கு பல்வேறு கட்சி தலைவர்களுடன் தொடர்பு உண்டு.


யாரையோ திருப்தி படுத்துவதற்காக இது போன்ற கருத்துக்களை அவர் சொல்கிறார். கட்சிக்கு தொடர்பு இல்லாத நபர் கூறும் கருத்துக்களால், கட்சிக்காக உழைப்பவர்களிடத்தில் கோபம் வரத்தான் செய்யும்.
செங்கோட்டையன், அ.தி.மு.க.,வின் முன்னோடி. அவரது பணியை சிறப்பாக செய்து வருகிறார். ஆனால் குழப்பத்தை ஏற்படுத்தும் விதமாக சைதை துரைசாமி போன்ற சந்தர்ப்பவாதிகள் ஏதாவது ஒரு கருத்தை கூறி ஊதி பெரிதாக்குகிறார்கள்.


செங்கோட்டையன் டில்லி சென்றார். நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்தார். அவ்வளவுதான், இதில் வேறொன்றும் இல்லை. இதை வைத்து குழப்பம் ஏற்படுத்த சிலர் நினைக்கின்றனர். அதனால் தான் சைதை துரைசாமிக்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.
இது, ஓ.பி.எஸ்., தரப்பு கருத்தா என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை, அது உங்கள் கருத்து. கச்சத்தீவை 99 ஆண்டுகள் குத்தகைக்கு எடுக்க வேண்டும் என, த.வெ.க., கோரிக்கை வைத்துள்ளது.
இந்த விஷயத்தில் மாநில அரசோ, மாநில கட்சிகளோ முடிவெடுக்க முடியாது. இந்திய அரசும், இலங்கை அரசும் அமர்ந்து பேசி முடிவெடுக்க வேண்டும்.


பிரதமர் இலங்கை சென்றுள்ளார், என்ன முடிவோடு வருகிறார் என்று பார்க்கலாம். தி.மு.க., தலைவர், முதல்வர் ஸ்டாலின், தமிழகத்தில் பல்வேறு வகை தோல்விகளை மறைக்க, மக்களை திசை திருப்பும் வகையில், பா.ஜ., அரசை விமர்சிக்கிறார். கேள்வி கேட்கும் எதிர்க்கட்சித் தலைவர் இ.பி.எஸ்.,சை எதிர்க்கிறார்.


தொகுதி மறு வரையறை, கச்சத்தீவு பிரச்னை குறித்து யாரும் கேள்வி கேட்கவில்லை. ஆனால் அதற்கான தீர்மானங்களை சட்டசபையில் கொண்டு வருகிறார்.
கடந்த, 1974ல், அன்றைய பிரதமரோடு கூட்டு சேர்ந்து, கச்சத்தீவை, இலங்கை அரசுக்கு கொடுக்க ஒத்துழைத்தவர் அப்போதைய தமிழக முதல்வர் கருணாநிதி. தற்போது அவரது மகன் ஸ்டாலின், கச்சத்தீவை மீட்க சட்டசபையில் தீர்மானம் கொண்டு வருகிறார்.


தேர்தலுக்கு முன், நீட் தேர்வை ஒழிக்கும் ரகசியங்கள் உள்ளது எனக் கூறி பல்வேறு முயற்சிகளை எடுத்து தோற்றுப் போனவர்கள் தி.மு.க.,வினர். கையெழுத்து இயக்கம் என்ற பெயரில் சேலம் மாநாட்டில், 30 லட்சம் பேரிடம் பெற்ற கையெழுத்து அங்கேயே பறந்தது.


ஓராண்டில் தேர்தல் வருகிறது என்பதால், நீட் தேர்வு குறித்து சட்டசபையில் அறிக்கை விட்டு, முதல்வர் ஸ்டாலின் கதை கூறுகிறார். மக்களை திசை திருப்ப, தங்கள் தோல்விகளை மறைக்க, மீண்டும் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக, பா.ஜ., அரசை விமர்சிக்கிறார். எதிர்த்து, அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., கேள்வி கேட்டால் பதில் அளிக்க முடியாமல் திணறுகிறார். இது தான் எதார்த்தமான உண்மை. இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement