டிரம்ப் வரி விதிப்பு எதிரொலி: பொருட்களை வாங்க குவிந்த அமெரிக்கர்கள்

4

வாஷிங்டன்: அமெரிக்காவிற்கு, பல நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரியை அதிபர் டிரம்ப் உயர்த்தி உள்ளார். இதனால், அந்த பொருட்கள் விலை உயரும் என்ற அச்சத்தில் அதனை அமெரிக்கர்கள் வாங்கி குவித்து வருகின்றனர்.


அமெரிக்க சந்தையில் பொருட்களை விற்பனை செய்யும் நாடுகளுக்கு கூடுதல் வரி விதிக்கப்போவதாக டிரம்ப் தினமும் எச்சரிக்கை விடுத்து வந்தார். கூறியபடி உலகின் 180 நாடுகளுக்கு வரி விதிப்பை அறிவித்து அமல் செய்ய உத்தரவிட்டுள்ளார். இதனால், இறக்குமதியாகும் ஆடைகள், ஷூக்கள், மரச்சாமான்கள் , உள்ளிட்டவை விலைஉயரும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. வெளிநாடுகளில் தயார் செய்யப்படும் ஆட்டோமொபைல் விலைகளும் உயரும் நிலை உள்ளது. அதற்கு முன்னர் , அந்த பொருட்களை அமெரிக்கர்கள் வாங்கிக் குவித்து வருகின்றனர்.

அது குறித்த பட்டியல்:

லேப்டாப்கள், ஸ்மார்ட் போன்கள்



சீனா பொருட்களுக்கு 52, தைவான் பொருட்களுக்கு 32 சதவீத வரி விதிக்கப்பட்டதை தொடர்ந்து , டேப்கள், ஸ்மார்ட்போன்கள், லேப்டாப்கள் வாங்கும் அமெரிக்கர்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. இந்த சாதனங்களுக்கு தேவையான உபகரணங்கள் இந்த இரண்டு நாடுகளில் இருந்து தான் இறக்குமதி செய்யப்படுகின்றன.

ஆடைகள், ஷூக்கள்



முக்கிய ஆடைபொருட்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன. அதில் வியாட்நாமிற்க 21, இந்தியா, இந்தோனேஷியா, வங்கதேச ஆடை பொருட்களுக்கு 37 சதவீதம் வரி விதிக்கப்படுகிறது. சீனாவில் இருந்தும் இறக்குமதி ஆகிறது. இதனால், ஜீன்ஸ், ஸ்போர்ட்ஸ் டிரஸ், ஷூக்கள் உள்ளிட்டவற்றையும் அமெரிக்கர்கள் வாங்க துவங்கி உள்ளனர்.

ஆட்டோமொபைல்



மின்சார வாகனங்கள், சந்தைக்கு புதிதாக வரும் வாகனங்கள் ஆகியவற்றை வாங்குவதில் அமெரிக்கர்கள் எப்போதும் ஆர்வம் காட்டுவார்கள். தற்போது, வெளிநாட்டில் தயாரிக்கப்பட்டு இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கு வரி உயர்த்தப்பட்டு உள்ளது. இது அமலுக்கு வருவதற்கு முன்னர் புதிதாக வாகனங்கள் வாங்க வேண்டும் என்ற எண்ணம் அமெரிக்கர்கள் மத்தியில் உள்ளது. இதனால், பல ஷோரூம்கள் நிரம்பி வழிகின்றன. உடனடியாக வாகனங்கள் கிடைக்காவிட்டாலும், முன்பதிவு செய்வதிலும் அவர்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.

வெளிநாட்டு உணவு பொருட்கள்



காபி, சிற்றுண்டிகள் மற்றும் அத்தியாவசிய பொருட்களும் அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படுகின்றன. இதுவும் வரி விதிப்பில் தப்பவில்லை. இதனால், அதன் விலை உயர்வதற்கு முன்னர், அப்பொருட்களை வாங்கி அமெரிக்கர்கள் பத்திரப்படுத்தி வருகின்றனர்.

ஜிம் சாதனங்கள்



திரெட்மில், மசாஜ் நாற்காலிகள் உள்ளிட்ட உடற்பயிற்சி கூடங்களில் பயன்படுத்தப்படும் பொருட்களை வாங்குவதற்கு இதுவே சரியான நேரம் எனக்கருதும் அமெரிக்க மக்கள் அதனை வாங்குவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். தற்போது அதன் விலை உயர்வாக இருந்தாலும் அதனை பற்றி கருத்தில் கொள்ளவில்லை

மின்னணு சாதனங்கள்



குளிர்சாதன பெட்டி, வாஷிங்மெஷீன், மைக்ரோவேவ்கள் உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்களும் அமெரிக்கர்களின் பட்டியலில் உள்ளது. இந்த பொருட்களுக்கு தேவையான உபகரணங்களும் சீனா, தைவான் உள்ளிட்ட நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன.


இதனை தவிர்த்து, சமையல் அறையில் பயன்படுத்தப்படும் பொருட்கள், வீடுகளை புதுப்பிப்பதற்கு தேவையான பொருட்கள் மற்றும் டயாப்பர், பொம்மைகள், குழந்தைகளுக்கான ஆடைகள் உள்ளிட்ட குழந்தைகளுக்கு தேவையான பொருட்களையும் அமெரிக்கர்கள் வாங்கி குவித்து வருகின்றனர்.

Advertisement