சைபர் மோசடி செய்பவர்கள் வாட்ஸ்அப் பயனர்களுக்கு குறி: உஷாராக இருக்க சைபர் க்ரைம் போலீஸ் அறிவுறுத்தல்

சென்னை: வாட்ஸ் அப் பயனர்களை குறி வைத்து சைபர் மோசடி சம்பவங்கள் அதிகரித்து வருவதால், பயனர்கள், பாஸ்வேர்டு உள்ளிட்ட எந்த தகவல்களையும் பகிர்வதை தவிர்க்க வேண்டும் என சென்னை சைபர் க்ரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து சைபர் க்ரைம் போலீசார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
மோசடி நபர்கள் பாதிக்கப்பட்டவரின் மொபைல்போனுக்கு ஆறு இலக்க ஓடிபி (OTP) குறியீடு எஸ்எம்எஸ் (SMS) மூலம் அனுப்பி வைப்பார்கள். பின்னர் தெரியாத செல்போன் எண்ணிலிருந்து, நமது வாட்ஸ்அப்பில் ஒரு செய்தி வரும். அதில் வாட்ஸ்அப் கணக்கிற்கான ஆறு இலக்க குறியீடு உங்களது எண்ணுக்கு தவறாக அனுப்பப்பட்டுவிட்டதாகவும், அந்த ஓடிபி குறியீட்டை பகிருமாறு மோசடி நபர்கள் கேட்பார்கள். எந்த சூழ்நிலையிலும் பாஸ்வேர்டுகள் பகிர்வதை தவிர்க்க வேண்டும்.
பாஸ் வேர்டுகளை பகிர்ந்தால், வாட்ஸ்அப் கணக்கு ஹேக் செய்யப்பட்டு, அது சைபர் குற்றவாளிகள் கட்டுப்பாட்டிற்கு சென்றுவிடும். அதன்பிறகு அவர்கள், வாட்ஸ் அப்பை பயன்படுத்தி, ஆள் மாறாட்டம் செய்து, அவருடைய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு செய்தி அனுப்புவர். அவற்றில் அவசர உதவி, விபத்து செலவுகள், மருத்துவத் தேவைகள் போன்றவற்றிற்காக பண உதவி கோருவர்.
இதனால், தகவல் பெறும் நபர் பணத்தை அனுப்பிவிட்டு, பின்னர் தான் இது ஒரு மோசடி என்பதை உணர்கிறார். நீங்கள் ஓடிபி பெற்றால், அதை யாருடனும் பகிர வேண்டாம். பாதிக்கப்பட்டிருந்தால் உடனடியாக சைபர் க்ரைமில் புகார் அளிக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


