காஞ்சிபுரம் வரதர் கோவிலில் பங்குனி உத்திர உத்சவம் துவக்கம்

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், பெருந்தேவி தாயார் திருஅவதார நட்சத்திரமான பங்குனி உத்திரத்திற்கு, பங்குனி உத்திர திருக்கல்யாண உத்சவம் நடத்தப்பட்டு வருகிறது. இதையொட்டி ஆண்டுதோறும் ஏழு நாள் பங்குனி உத்திர திருக்கல்யாண உத்சவம் நடைபெறும். அதன்படி, நடப்பாண்டுக்கான உத்சவம் நேற்று துவங்கியது.

முதல் நாள் உத்சவமான நேற்று, மாலை 6:00 மணிக்கு கண்ணாடி அறையில் இருந்து பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி, மலையாள நாச்சியாருடன் திருவடிகோவில் புறப்பாடு நடந்தது.

திருவடிகோவிலில் இருந்து புறப்பாடாகி கோவிலில் உள்ள நுாற்றுகால் மண்டபத்தில் எழுந்தருளினர். அங்கு ஊஞ்சல் சேவை உத்சவம் விமரிசையாக நடந்தது. இரவு 7:00 மணிக்கு திருவாராதானம், நிவேதனம் நடந்தது. இரவு 8:00 மணிக்கு பெருமாள், மலையாள நாச்சியார் கண்ணாடி அறையில் எழுந்தருளினர்.

பங்குனி உத்திர திருக்கல்யாண உத்சவ தினமான வரும் 11ம் தேதி, காலை 8:30 மணிக்கு, தாயார் சன்னிதியில் பெருந்தேவி தாயாருக்கு சிறப்பு திருமஞ்சனமும், விசேஷ மலர் அலங்காரமும், பெருமாள், உபயநாச்சியாருக்கு திருமஞ்சனமும் நடக்கிறது.

மாலை 6:30 மணிக்கு பெருமாள், தாயார், மலையாள நாச்சியார் திருவடிகோவில் புறப்பாடாகி, நான்கு கால் மண்டபத்தில், பங்குனி உத்திர திருக்கல்யாண பெருவிழா நடக்கிறது.

இதில், பெருமாளுக்கும், மலையாள நாச்சியாருக்கும் மாலை மாற்றும் வைபவம் விமரிசையாக நடக்கிறது. தொடர்ந்து, கண்ணாடி அறையில் தரிசன தாம்பூலமாகி, தாயார் சன்னிதிக்கு வந்தடைவார்.

தொடர்ந்து ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே நடைபெறும் சிறப்பு நிகழ்வான, பெருமாள், ஆண்டாள், ஸ்ரீதேவி, பூதேவி, மலையாள நாச்சியார், தாயார் சன்னிதியில் எழுந்தருளும் தாயார் சேர்த்தியறை சேவை நடக்கிறது.

வரும் 12ம் தேதி கந்தபொடி வசந்தம் உத்சவம் நடக்கிறது. இதில், கண்ணாடி அறையில் பெருமாள், உபயநாச்சியாருக்கு திருமஞ்சனம் நடக்கிறது. மாலை 6:00 மணிக்கு மாடவீதி புறப்பாடு நடக்கிறது.

Advertisement