தன் மனைவியை தவறாக பேசிய தந்தையை குத்திக்கொன்ற மகன்

துாத்துக்குடி:மனைவியிடம் தகராறு செய்த தந்தையை, கத்தியால் குத்தி கொலை செய்த மகனை போலீசார் கைது செய்தனர்.

துாத்துக்குடி, மகிழ்ச்சிபுரம் மேற்கு பகுதியை சேர்ந்தவர் ராஜ், 55; மீனவர். நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல மீன்பிடி தொழிலுக்கு சென்றுவிட்டு, பைக்கில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.

வீட்டின் அருகே அவர் சென்ற போது வழிமறித்த அவரது இரண்டாவது மகன் ஜேம்ஸ், கத்தியால் குத்திவிட்டு தப்பியோடினார். சம்பவ இடத்திலேயே ராஜ் உயிரிழந்தார். சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து, ஜேம்ஸை கைது செய்தனர்.

போலீசார் கூறியதாவது:

ராஜிக்கும், ஜேம்ஸ் மனைவி சித்ராவுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. வாடகைக்கு வீடு எடுத்து மனைவி சித்ராவுடன் ஜேம்ஸ் சென்றுவிட்டார். சில நாட்களுக்கு முன் அந்த வீட்டிற்கு சென்ற ராஜ், அங்கு தனியாக இருந்த சித்ராவிடம் தகராறு செய்து, தொட்டு பேசியுள்ளார்.

இதுகுறித்து ஜேம்ஸிடம் சித்ரா கூறியுள்ளார். ஆத்திரமடைந்த ஜேம்ஸ், தந்தையை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement