கோழி திருட்டில் நடந்த கொலை வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள்

தேனி : தேனி அருகே கோழி திருட்டில் நடந்த கொலை வழக்கில் கோழிக்கடை உரிமையாளர் முருகன் 51, என்பவருக்கு ஆயுள் தண்டனை விதித்து தேனி நீதிமன்றம் உத்தரவிட்டது.

தேனி வயல்பட்டி இந்திராநகர் பரமன். இவரது மகன் பிரபாகரன் 26,கூலித்தொழிலாளி. இவர்களது வீட்டில் இருந்த கோழி திருடு போனது. அதனை திருடிய அதே பகுதியை சேர்ந்த கோழிக்கடை உரிமையாளர் முருகன் 51, மகன் ராஜபாண்டி 20, சின்னமொக்கன் மகன் ராமன் ஆகியோரை பரமன் பிடித்து எச்சரித்து அனுப்பினார். இச்சம்பவம் தொடர்பாக பரமன் மகன் பிரபாகரனுக்கும், ராஜபாண்டியனுக்கும் முன்விரோதம் ஏற்பட்டது.

இந்நிலையில் 2019 மே 13ம் தேதி அப் பகுதியில் நடந்து சென்ற பிரபாகரனை முருகன் பிடித்துக்கொண்டார். அவரது மகன் ராஜபாண்டி கத்தியால் பிரபாகரனை குத்தினார்.

காயமடைந்த பிரபாகரனை தேனி அரசு மருத்துவக்கல்லுாரியில் சேர்த்தனர். அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

வழக்கில் தொடர்புடைய ராஜபாண்டியன் தற்கொலை செய்து கொண்டார்.இந்த வழக்கில் விசாரணை முடிந்து முதன்மை மாவட்ட நீதிபதி சொர்ணம் ஜெ.நடராஜன் வழங்கிய தீர்ப்பில் முருகனுக்கு ஆயுள் தண்டனை, ரூ.5ஆயிரம் அபராதம் விதித்தார். கட்ட தவறினால் மேலும் ஒரு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தார். அரசு வழக்கறிஞர் பாஸ்கரன் ஆஜரானார்.

Advertisement