இறந்து கிடந்தவர் உடலை மீட்பதில் இரு மாநில போலீசார் குழப்பம்

நெல்லிக்குப்பம் : பெண்ணையாற்றில் இறந்து கிடந்தவர் உடலை மீட்பதில், இரு மாநில போலீசாரிடையே குழப்பம் ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது.
நெல்லிக்குப்பம், முள்ளிகிராம்பட்டையொட்டி பெண்ணையாறு ஓடுகிறது. இதன் வட கரையில் புதுச்சேரி மாநிலத்திற்குட்பட்ட மணல்மேடு பகுதி உள்ளது. ஆற்றில் பாதி துாரம் புதுச்சேரி எல்லையில் வருவதால், அங்கு, புதுச்சேரி மாநில சாராய கடை வைத்துள்ளனர்.
நேற்று முன்தினம் வீட்டில் இருந்து வெளியே சென்ற முள்ளிகிராம்பட்டு பகுதியை சேர்ந்த கெங்கமுத்து,55; ஆற்றின் நடுவே இறந்து கிடந்தார். அங்கு வந்த புதுச்சேரி மாநில போலீசார், சம்பவம் நடந்த இடம் தமிழக எல்லையில் வருவதாக கூறி திரும்பினர். அதையடுத்து தமிழக பகுதியான நெல்லிக்குப்பம் போலீசார் சென்ற பார்த்துவிட்டு, சம்பவ இடம் புதுச்சேரி எல்லையில் வருவதாக கூறினர். இதனால், குழப்பம் ஏற்பட்டது.
இந்நிலையில் அங்கு திரண்ட கெங்கமுத்துவின் உறவினர்கள், புதுச்சேரி சாராயக் கடையில் அவர் இறந்திருக்கலாம், உடலை தமிழக பகுதியில் போட்டு விட்டு சென்றுள்ளனர்.
இதுபோன்று சம்பவம் அடிக்கடி நடப்பதால் சாராயக் கடையை மூட வேண்டும். அதுவரை உடலை வாங்க மாட்டோம் எனக் கூறி போலீசாரிடம் வாக்குவாதம் செய்தனர்.
நெல்லிக்குப்பம் போலீசார் சமாதானம் செய்து, இறந்தவரின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி, வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.