ராமேஸ்வரத்தில் புதிய பாம்பன் ரயில் பாலத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி; சிறப்புகள் ஏராளம்!

ராமநாதபுரம்: ராமேஸ்வரத்தில் புதிய பாம்பன் ரயில் பாலத்தை இன்று (ஏப்.,06) பிரதமர் மோடி திறந்து வைத்தார். பின்னர், அவர் ராமேஸ்வரம்-தாம்பரம் (சென்னை) இடையே புதிய ரயில் சேவையை தொடங்கி வைத்தார்.
இலங்கை பயணத்தை வெற்றிகரமாக முடித்துவிட்டு, இன்று பிரதமர் மோடி தமிழகம் வந்தார். ராம நவமி நாளான இன்று, மதியம் 1 மணியளவில், ராமேஸ்வரத்தில் இந்தியாவின் முதல் செங்குத்து தூக்கு கடல் பாலமான புதிய பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.


தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி, சட்டையை பிரதமர் மோடி அணிந்து இருந்தார். மண்டபத்தில் இருந்து பாம்பனுக்கு காரில் சென்ற போது, சாலையின் இருபுறமும் கூடியிருந்த மக்களை பார்த்து பிரதமர் மோடி கை அசைத்தார்.
ராமேஸ்வரம்-தாம்பரம் (சென்னை) இடையே புதிய ரயில் சேவையை கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.







புதிய ரயில் பாலம் சிறப்புகள்:
* புதிய ரயில் பாலத்தை கப்பல்கள், ஆழ்கடல் மீன்பிடி படகுகள் கடந்து செல்ல பாலம் நடுவில் 240 அடி நீளம் 570 டன்னில் வடிவமைத்த செங்குத்து துாக்கு பாலம் பொருத்தப்பட்டுள்ளது.
* இந்த துாக்கு பாலத்தின் இருமுனையிலும் 34 மீ., உயரத்தில் இரு இரும்பு கோபுரங்கள் உள்ளன. இதன் மேல் தளத்தில் இரு ராட்சத இரும்பு வீல்கள் உள்ளன.
* இந்த வீலில் துாக்கு பாலத்தை திறந்து மூட கம்பி வடங்கள் சுற்றி உள்ளனர்.இந்த பாலத்தை 'லிப்ட்' முறையில் திறந்து மூடும் வகையில் வடிவமைத்துள்ளனர்.
* இதனை ஹைட்ராலிக் இயந்திரத்தில் பொருத்தி உள்ளதால் ஒருமுறை திறக்க 5 நிமிடம் 30 வினாடிகள் ஆகும்.
* இதை 17 மீ., உயரம் வரை திறந்து வைத்திருக்க முடியும் என்பதால் கனரக சரக்கு கப்பல்கள், கடற்படை கப்பல்கள், எவ்வித சிரமம் இன்றி கடந்து செல்லலாம்.
* துாக்கு பாலம் மூடப்பட்டு இருக்கும் சமயத்தில் கடல் மட்டத்தில் இருந்து 11 மீ., உயரத்தில் இருக்கும். இதனால் துாக்கு பாலத்தை திறக்காமலே பாம்பன், ராமேஸ்வரம் பகுதியில் உள்ள படகுகள் பாலத்தை கடந்து செல்ல முடியும்.
* ஸ்பெயின் நிறுவன பொறியாளர்களின் டிசைனில் வடிவமைக்கப்பட்டது. இதுபோன்ற துாக்கு பாலம் அமெரிக்கா, பிரான்சில் மட்டுமே உள்ளது.
* துாக்கு பாலத்தில் அனிமோ மீட்டர் கருவி பொருத்தி உள்ளதால், மணிக்கு 55 கி.மீ.,க்கு மேல் சூறைக் காற்று வீசினால் இக்கருவி தானியங்கியாக செயல்பட்டு ரெட் சிக்னல் காட்டும். இதனால் பாலத்தில் ரயில்கள் செல்ல தடை விதிக்கப்படும்.
* துாக்கு பாலத்தை திறந்து மூட புதிய பாலம் கிழக்கு நுழைவில் 700 கிலோ வாட் திறன் கொண்ட தனி டிரான்ஸ்பார்மர் பொருத்தப்பட்டுள்ளது. இருப்பினும் மின் தடை ஏற்பட்டால் 650 கிலோ வாட் திறன் கொண்ட இரு ஜெனரேட்டர்கள் மூலம் இயக்கப்படும்.
* புதிய ரயில் பாலம் மற்றும் துாக்கு பாலத்தில் மின்சார ரயில்கள் அதுவும் இரு ரயில்கள் செல்லும் வகையிலும் வடிவமைத்துள்ளனர்.
* புதிய பாலத்தில் ஒரு வாரத்திற்கு 134 ரயில்கள், அதுவும் அதிகபட்சமாக 75 கி.மீ., வேகத்தில் செல்ல முடியும்.
* துாக்கு பாலத்தின் இரு முனைகளில் உள்ள 34 மீ., உயர இரும்பு கோபுரத்தின் மேல் தளத்திற்கு செல்ல லிப்ட் வசதி உள்ளது.
* உப்புக்காற்றில் துருப்பிடிக்காத வகையில் துாக்கு பாலத்தில் 'ஜிங்மெட்டாலைசிங்' மற்றும் 'பாலிசிலோசின் பெயின்ட்' பூசி உள்ளனர்.
* 35 ஆண்டிற்கு துருப்பிடிக்காத வகையில் இந்த ரசாயனம் கலந்த பெயின்ட் பூசியதற்கு செலவு ஒரு கோடி ரூபாயை தாண்டியது. இந்த உயர் ரக பெயின்ட் இந்தியாவில் வேறு எந்த ரயில் பாலத்திற்கும் பூசப்படவில்லை.
பாலத்தில் பழுது
புதிதாக திறக்கப்பட்ட செங்குத்து தூக்கு பாலத்தை கீழே இறக்க முடியாமல் பழுது ஏற்பட்டது. தூக்கு பாலம் ஒருபுறம் ஏற்றம், இறக்கமாக உள்ளதால் சிக்கலானது. இதனை சரி செய்யும் பணியில் பணியாளர்கள் மற்றும் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.












மேலும்
-
சட்டசபையில் இருந்து அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் வெளியேற்றம்; இன்று ஒரு நாள் சஸ்பெண்ட்
-
'ஆரூரா... தியாகேசா' கோஷங்கள் முழங்க திருவாரூர் ஆழி தேரோட்டம் கோலாகலம்
-
கனடா பார்லிமென்ட் தேர்தலில் இந்தியருடன் மோதும் பாகிஸ்தானியர்!
-
காயம் அடைந்த பாகிஸ்தான் மீனவருக்கு உதவிய இந்திய கடற்படை; நெகிழ்ச்சி சம்பவம்!
-
பங்குச் சந்தைகள் சரிவு; முதலீட்டாளர்களுக்கு ரூ.7 லட்சம் கோடி இழப்பு
-
தென்காசி காசி விஸ்வநாதர் கோவிலில் கும்பாபிஷேகம்