இன்னும் நகராமல் அப்படியே இருக்கும் தேர்தல் வாக்குறுதி! முதல்வரிடம் கேள்வி எழுப்ப காத்திருக்கும் கோவை மக்கள்

111

கோவை: தி.மு.க., ஆட்சிக்கு வந்தபின், கோவைக்கென பல்வேறு சிறப்பு திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. செம்மொழி பூங்கா, நுாலகம் உள்ளிட்ட சில பணிகள் நடந்து வருகின்றன என்றாலும் கூட, ஏற்கனவே அறிவித்த பல்வேறு திட்டங்கள், இன்னும் காகித வடிவிலேயே இருக்கின்றன.

அவற்றில் சில...



2021ல் தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், கோவையில் நடந்த முதல் அரசு விழாவில் முதல்வர் பங்கேற்றபோது, ஐந்து திட்டச்சாலைகள் உருவாக்க அடிக்கல் நட்டார். இன்று வரை அதற்கு நிதி ஒதுக்கி, செயல்பாட்டுக்கு கொண்டு வரவே இல்லை. இதுதொடர்பாக, நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் நேருவிடம் நேருக்கு நேராக கேள்வி எழுப்பியபோது, அவருக்கே அத்திட்டம் தொடர்பாக தெரியவில்லை.

கோவை பெருநகர வளர்ச்சி குழுமம் அமைக்கப்படும் என்கிற அறிவிப்பு, தொழில்துறையினரால் எதிர்பார்க்கப்படுகிறது.

கோவைக்கான 'மாஸ்டர் பிளான்' திட்டத்தை, மார்ச் மாதம் வெளியிடுவேன் என சமீபத்தில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். திட்டத்தை, நகர ஊரமைப்புத்துறையினர் இன்னும் முழுமைப்படுத்தாமல் இருக்கின்றனர்.

லோக்சபா தேர்தல் சமயத்தில், சர்வதேச கிரிக்கெட் மைதானம் கட்டப்படும் என வாக்குறுதி தரப்பட்டது. தி.மு.க., வெற்றி பெற்றதும், ஒண்டிப்புதுார் திறந்தவெளி சிறை மைதானம் தேர்வு செய்யப்பட்டது; இன்னும் நிதி ஒதுக்கி, பணி துவக்கப்படவில்லை.

ரேஷனில் பாமாயிலுக்கு பதிலாக, தேங்காய் எண்ணெய் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. கோவையில் இருந்து பரிந்துரையும் செய்யப்பட்டது; இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டிருக்கிறது.

'சொத்து வரிக்கான ஒரு சதவீத அபராத வரி ரத்து செய்யப்படும்' என, தமிழக நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் நேரு, சமீபத்தில் கோவையில் அறிவித்தார். அதற்கான அரசாணை இன்னும் வெளியாகவில்லை என்று கூறி, அந்த அறிவிப்பை, அதிகாரிகள் செயல்படுத்தவில்லை.

கோவை உக்கடம் மற்றும் வெரைட்டி ஹால் ரோட்டில், துாய்மை பணியாளர்களுக்காக கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகளை, கடந்தாண்டு முதல்வர், 'வீடியோ கான்பரன்ஸ்' முறையில் திறந்து வைத்தார். இன்று வரை பயனாளிகளுக்கு ஒதுக்கப்படவில்லை.

சொத்து வரி, 100 சதவீதம் உயர்த்தப்பட்டிருக்கிறது. 'ட்ரோன் சர்வே' எடுத்து, கட்டடங்களின் வரி வகை மாற்றப்பட்டிருக்கிறது. பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். கூட்டணி கட்சியினர் வலியுறுத்தியும் கூட, இதன் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்காமல் இருக்கிறது.

சிங்காநல்லுார் உழவர் சந்தை அருகே, வீட்டு வசதி வாரிய அடுக்குமாடி குடியிருப்பு புதுப்பித்துக் கட்டுவதற்கு பூமி பூஜை போடப்பட்டது; அதன்பின், கிடப்பில் போடப்பட்டு விட்டது.

முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆட்சிக்காலத்தில், ஹோப் காலேஜ் - விளாங்குறிச்சி ரோடு, நீலிக்கோணாம்பாளையத்தில் ரயில்வே மேம்பாலம் கட்டும் திட்டம் அறிவிக்கப்பட்டது. இவ்விரு பகுதியிலும் ரயில்வே பகுதியில் அந்தரத்தில் இரும்பு பாலம் நிற்கிறது; இன்னும் முழுமை அடையவில்லை.

இதுபோன்ற பல்வேறு திட்டங்கள் இன்னும் நகராமல் இருக்கின்றன. இவற்றை செயல்படுத்த முதல்வர் ஸ்டாலின், சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்கள் மூலம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு, மக்கள் மத்தியில் எழுந்திருக்கிறது.


ஜி.டி.நாயுடு நினைவு மண்டபம்



2021 தேர்தல் அறிக்கையில், கோவைக்கென, 47 அறிவிப்புகளை, தி.மு.க., கூறியது. அதில், நொய்யல் ஆறு, பவானி ஆறு, அமராவதி ஆறு ஆகியவை இணைக்கப்படும், பவானி ஆற்றில் இருந்து சின்ன வேடம்பட்டி ஏரிக்கு, உபரி நீர் கொண்டு வரப்படும், அனைத்து வசதிகளுடன் ஒருங்கிணைந்த ஆயத்த ஆடை ஜவுளி பூங்கா, பம்ப் செட் சோதனை ஆய்வகம் கோவையில் அமைக்கப்படும், விஞ்ஞானி ஜி.டி.நாயுடுவுக்கு நினைவு மண்டபம் கட்டப்படும் என்பன உள்ளிட்ட அறிவிப்புகள் இன்னும் காகித அளவிலேயே இருக்கின்றன.

Advertisement