தங்கம் வென்றார் ஹிதேஷ்: உலக குத்துச்சண்டையில் வரலாறு

புதுடில்லி: உலக குத்துச்சண்டையில் இந்தியாவின் ஹிதேஷ் தங்கம் வென்றார்.

பிரேசிலில், உலக குத்துச்சண்டை கோப்பை முதல் சீசன் நடந்தது. இதில் 70 கிலோ எடைப்பிரிவு பைனலில் இந்தியாவின் ஹிதேஷ் குலியா, இங்கிலாந்தின் ஓடெல் கமாரா மோத இருந்தனர். கடைசி நேரத்தில் காயம் காரணமாக இங்கிலாந்து வீரர் விலக, ஹிதேஷ் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு தங்கத்தை தட்டிச் சென்றார். உலக குத்துச்சண்டை கோப்பையில் தங்கம் வென்ற முதல் இந்தியர் என்ற வரலாறு படைத்தார் ஹிதேஷ்.

இதுகுறித்து ஹிதேஷ் கூறுகையில், ''இத்தொடருக்கு முன் பிரேசிலில் நடந்த பயிற்சி முகாமில் பங்கேற்றது, தங்கம் வென்று சாதிக்க உதவியது. வரும் செப்டம்பரில் நடக்கவுள்ள உலக சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்பதே இலக்கு,'' என்றார்.

அபினாஷ் 'வெள்ளி': பின், 65 கிலோ எடைப்பிரிவு பைனலில் இந்தியாவின் அபினாஷ் ஜாம்வல், அர்ஜென்டினாவின் யூரி ரெய்சிடம் தோல்வியடைந்து வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றினார்.

மற்ற எடைப்பிரிவு அரையிறுதியில் தோல்வியடைந்த இந்தியாவின் ஜடுமானி சிங் (50 கிலோ), மணிஷ் ரத்தோர் (55 கிலோ), சச்சின் (60 கிலோ), விஷால் (90 கிலோ) வெண்கலம் வென்றனர்.
இத்தொடரில் இந்தியாவுக்கு ஒரு தங்கம், ஒரு வெள்ளி, 4 வெண்கலம் என, மொத்தம் 6 பதக்கம் கிடைத்தது.




கடற்படை மாலுமி


ஹரியானாவை சேர்ந்த ஹிதேஷ் குலியா 20, இந்திய கடற்படையில் மாலுமியாக உள்ளார். உள்ளூர் போட்டியில் சர்வீசஸ் அணிக்காக விளையாடி வரும் இவர், நடப்பு ஆண்டில் நடந்த சீனியர் தேசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப், 38வது தேசிய விளையாட்டில் தங்கப் பதக்கம் வென்றார்.

Advertisement