ஊரப்பாக்கம் ஊராட்சியில் குப்பை தொட்டி இல்லாமல் அவதி

ஊரப்பாக்கம்:ஊரப்பாக்கத்தில், சாலையோரம் வீசப்படும் குப்பை மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளால், வாகன ஓட்டிகள், பகுதிவாசிகள் கடும் சிரமமடைகின்றனர்.

செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்துார் ஒன்றியத்தின் பெரிய ஊராட்சியாக ஊரப்பாக்கம் உள்ளது. இங்கு 15 வார்டுகளில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட நபர்கள் வசிக்கிறார்கள்.

துப்புரவு பணியாளர்கள் மற்றும் குப்பை சேகரிப்பு வாகனங்கள் பற்றாக்குறையால், அனைத்து தெருக்களிலும் மலைபோல் குப்பை தேங்கி கிடக்கிறது.

இதனால், ஊராட்சி முழுதும் சுகாதார சீர்கேடு நிலவுகிறது. தவிர, கொசு பெருக்கம் மிகுதியாகி, பகுதிவாசிகள் கடும் அவஸ்தையை எதிர்கொள்கின்றனர்.

பகுதிவாசிகள் கூறியதாவது:

தெருவோரங்களில் வீசப்படும் குப்பை மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளை வாரம் இருமுறையேனும் அகற்ற வேண்டும் என, ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை கோரிக்கை வைத்தும், எந்த நடவடிக்கையும் இல்லை.

ஆள் பற்றாக்குறை, வாகனங்கள் பற்றாக்குறை என, ஊராட்சி நிர்வாகம் கூறுகிறது. குப்பை தொட்டிகள் எங்கும் இல்லை. இதனால், தெருக்களில் குப்பை வீசப்படுகிறது.

வாகனங்கள் மற்றும் ஆட்கள் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யவும், தெருக்கள் தோறும் குப்பை தொட்டிகள் அமைக்கவும் மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement