அஞ்சல் கோட்டத்தில் சேமிப்பு கணக்கு அதிகரிப்பு செல்வ மகள் சேமிப்பு திட்டத்தின் எண்ணிக்கையும் உயர்வு

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அஞ்சலக கோட்டத்தின் கீழ், காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய தலைமை தபால் நிலையங்கள், 54 துணை அஞ்சலகங்கள், 273 கிளை தபால் நிலையங்கள் உள்ளன.

இங்கு, தொடர் வைப்பு கணக்கு, முதியோர் சேமிப்பு திட்டம், பொன்மகன் வைப்பு நிதி, கால வைப்பு கணக்கு, மாதாந்திர வருமான திட்டம். அஞ்சல் ஆயுள் காப்பீடு திட்டம், தேசிய சேமிப்பு பத்திரம், கிஸான் விகாஸ் பத்திரம் உள்ளிட்ட திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.

இந்த அஞ்சலக சேமிப்பு திட்டங்களுக்கு, 4 சதவீத வட்டியில் இருந்து, வாடிக்கையாளர் எடுக்கும் திட்டங்களுக்கு ஏற்றவாறு, 8.5 சதவீதம் வட்டி வரை அஞ்சல் துறை வழங்கி, சேமிப்பு கணக்குகள் துவக்குவதை மத்திய அரசு ஊக்குவிக்கிறது.

காஞ்சிபுரம் அஞ்சல் கோட்டத்தில், 2020 - -21ம் ஆண்டு, 77,992 அஞ்சல் கணக்குகள்; 2021- - 22ம் நிதி ஆண்டு, 99,459 கணக்குகள் துவக்கி ஏறுமுகத்துடன் இருந்தது.

இதையடுத்து, 2023 - 24ம் நிதி ஆண்டில் 56,000 சேமிப்பு கணக்குகள் துவக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது.

இதில், 56,940 சேமிப்பு கணக்குகள் துவக்கி சாதனை படைக்கப்பட்டு உள்ளது.அதேபோல, தேசிய பத்திரங்களுக்கு, 10,000 இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. இலக்கை தாண்டி கூடுதலாக, 718 தேசிய பத்திரங்கள் துவக்கப்பட்டுள்ளன.

கடந்த 2024 - 25ம் நிதி ஆண்டில் 42,500 இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது.

இதில், 59,102 சேமிப்பு கணக்குகள் துவக்கி, 16,602 கணக்குகள் கூடுதலாக துவக்கப்பட்டுள்ளன.

அதேபோல, 7,400 செல்வ மகள் சேமிப்பு கணக்கு துவக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது. இதில், 8,688 சேமிப்பு கணக்குகள் துவக்கப்பட்டு, 1,288 கணக்குகள் கூடுதலாக துவக்கப்பட்டு உள்ளன.

இதையடுத்து, 10,500 தேசிய பத்திரங்கள் சேர்க்க, இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது.

இதில், 13,100 கணக்குகள் துவக்கப்பட்டு, 2,600 கணக்குகள் கூடுதலாக சேர்க்கப்பட்டு உள்ளன.

அஞ்சல் துறை இலக்கு நிர்ணயம் செய்ததைக் காட்டிலும், கூடுதல் சதவீதம் இலக்கு நிர்ணயம் நிறைவு செய்துள்ளது.

குறிப்பாக, வழக்கமான கணக்குகளை காட்டிலும், செல்வ மகள் சேமிப்பு திட்ட கணக்குகளின் எண்ணிக்கை கூடுதலாக உள்ளது.

இதுகுறித்து, காஞ்சிபுரம் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அருள்தாஸ் கூறியதாவது:

காஞ்சிபுரம் அஞ்சல் கோட்டம், பலவித அஞ்சல் கணக்குகள் துவக்குவதில், முன்னிலை வகித்து வருகிறது. குறிப்பாக, சென்னை மண்டலத்தில் காஞ்சிபுரம் கோட்டம் முதல் இடம் பிடித்துள்ளது.

இது தவிர, கிராமப்புற அஞ்சல் ஆயுள் காப்பீடு மற்றும் அஞ்சல் ஆயுள் காப்பீடு ஆகிய திட்டங்களில் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறோம். அதற்கேற்ப துறை ரீதியாக ஊழியர்களும் ஒத்துழைப்பு அளித்து வருகின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement