கோயம்பேடு சந்தையில் தேங்கும் மழைநீர் இரு பகுதிகளாக பிரித்து வெளியேற்ற திட்டம்

கோயம்பேடு:கோயம்பேடு சந்தை வளாகத்தில், கடந்தாண்டு பெய்த மழைநீர் தேங்கி பாதிப்பு ஏற்படுத்தியது.

இதற்கு தீர்வு காண, சந்தை வளாகத்தில் புதிதாக வடிகால்வாய் மற்றும் பழைய வடிகால்வாயை துார்வாரும் பணி மேற்கொள்ளப்பட்டது.

அந்த வகையில், கோயம்பேடு சந்தை 'பி' சாலையின் இருபுறமும் உள்ள மழைநீர் வடிகால்வாயை உடைத்து, 17 கோடி ரூபாய் மதிப்பில் புதிதாக கட்டும் பணி நடந்து வருகிறது.

கோயம்பேடு சந்தையில் தேங்கும் மழைநீரை, 'பி' சாலை வழியாக கூவம் ஆற்றிற்கு எடுத்துச் செல்ல திட்டமிடப்பட்டு உள்ளது.

தவிர, மலர் மற்றும் பழ சந்தையில் தேங்கும் மழைநீரை 'ஏ' சாலையில் புதிதாக மழைநீர் வடிகால்வாய் அமைத்து, காளியம்மன் கோவில் தெரு வழியாக 100 அடி சாலைக்கு எடுத்து சென்று, அங்கிருந்து கூவம் ஆற்றில் வெளியேற்றவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது.

இந்த இரு மழைநீர் வடிகால்வாய் பணி நிறைவடைந்ததும், கோயம்பேடு சந்தை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் மழைநீர் தேங்கும் பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும் என, சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement