கச்சத்தீவை பிரதமர் மீட்பார்: மதுரை ஆதீனம் நம்பிக்கை

மதுரை: 'கச்சத்தீவை மீட்பதுடன், இலங்கை தமிழர்களுக்கு தனி நாடு அமைந்திடவும், பிரதமர் மோடி நடவடிக்கை எடுப்பார்' என, மதுரை ஆதீனம் தெரிவித்தார்.
பாம்பன் புதிய பாலம் திறப்பு விழாவுக்கு வருகை தந்த பிரதமர் மோடிக்கு வாழ்த்துத் தெரிவித்து, மதுரை ஆதீனம் வெளியிட்ட வீடியோ பதிவு:
ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட ரயில்வே பாலத்திற்கு பின், தற்போது பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள புதிய ரயில்வே பாலம் பெருமைக்குரியது.
இலங்கை தமிழர்களுக்கான பல்வேறு கோரிக்கைகளை, பிரதமர் மோடியிடம் தெரிவித்திருந்தேன். அவை அத்தனையையும் நிறைவேற்றி இருக்கிறார்.
குறிப்பாக, தமிழக மீனவர்கள் அத்தனை பேரையும் விடுதலை செய்ய வைத்துள்ளார். அவர்களின் படகுகளையும் மீட்டுக்கொண்டு வந்துள்ளார். தொடர்ந்து இலங்கை தமிழர்களின் அடிப்படை உரிமைகளை பாதுகாப்பதற்கும், இலங்கை தமிழர்களுக்கு வீடுகள் கட்டிக் கொடுக்கவும் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
கச்சத்தீவு, காங்கிரஸ் ஆட்சியில் தான் தாரை வார்க்கப்பட்டது. அப்போது அதற்கு துணையாக இருந்தவர்கள் குறித்து நான் பேச விரும்பவில்லை. இப்போது கச்சத்தீவை மீட்க வேண்டும் என, அவர்கள் எல்லாம் பேசி வருகின்றனர். அதனால், பிரதமர் மோடி கச்சத்தீவை மீட்டு தந்து, இலங்கை தமிழர்களுக்கு தனி நாடு அமைந்திடவும் நடவடிக்கை எடுப்பார் என்ற நம்பிக்கை இருக்கிறது.
இவ்வாறு வீடியோவில் ஆதினம் தெரிவித்துஉள்ளார்.
