கந்தலான திருக்கோவிலுார் - வீரட்டகரம் சாலை

திருக்கோவிலுார் : திருக்கோவிலுாரில் இருந்து தேவியகரம் வழியாக வீரட்டகரம் செல்லும் 3 கி.மீ., துார சாலை படு மோசமானதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
திருக்கோவிலுாரில் இருந்து தேவியகரம் வழியாக விரட்டகரம் செல்லும் சாலை 3 கி.மீ., துாரம் உள்ளது.
ஒன்றிய நிர்வாகத்தின் பராமரிப்பில் உள்ள இந்த தார் சாலை ஜல்லிகள் பெயர்ந்து குண்டும், குழியுமாகி படு மோசமாக உள்ளது.
இதனால், இந்த வழியாக சென்று வந்த 5 மினி பஸ்கள் தற்போது சாலை சரியில்லாத காரணத்தால் நிறுத்தப்பட்டு விட்டது.
கார் உள்ளிட்ட இரு சக்கர வாகன ஓட்டிகள் பழுதடைந்த சாலையின் வழியாக ஏரிக்கரையை கடப்பதற்கு மிகுந்த அச்சத்துடனே செல்கின்றனர்.
ஒன்றிய நிர்வாகம் உடனடி நடவடிக்கை மேற்கொண்டு சாலையை சீரமைக்க வேண்டும் என்பதே இக்கிராம மக்களின் கோரிக்கையாக உள்ளது.
இரண்டு தொகுதிக்குள் தேவியகரம்
தேவியகரம் ஊராட்சியில் மொத்தம் 2000 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 1800 வாக்காளர்கள் திருக்கோவிலுார் தொகுதியிலும், 200 வாக்காளர்கள் ரிஷிவந்தியம் தொகுதியிலும் உள்ளனர்.
திருக்கோவிலுார் ஒன்றிய அலுவலகம் முழுதும் ரிஷிவந்தியம் எம்.எல்.ஏ.,வின் கட்டுப் பாட்டில் இருப்பதால், திருக்கோவிலுார் தொகுதி கிராமங்களுக்கு நிதி ஒதுக்குவதில் பாரபட்சம் காட்டும் ஒன்றிய நிர்வாகத்தின் எடுத்துக்காட்டுதான் இந்த சாலை என்கின்றனர் இக்கிராம மக்கள்.