கைவிடப்பட்ட கிராம காவல் அலுவலர் திட்டம்... அவசியம்; மீண்டும் நடைமுறைப்படுத்த கோரிக்கை

கள்ளக்குறிச்சி : மாவட்டத்தில் பொதுமக்களுக்கும், போலீசாருக்கும் நல்லுணர்வுஏற்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்ட கிராம விழிப்புணர்வு காவல் அலுவலர் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மாவட்டத்தில் நகர பகுதிகளை விட கிராமப்புறங்களில் அதிகளவு குற்ற சம்பவங்கள் நடப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.
இதை தடுக்கவும், பொதுமக்கள் மற்றும் போலீசாருக்கும் இடையே நல்லுணர்வு ஏற்படும் வகையிலும், 'வில்லேஜ் விஜிலென்ஸ் போலீஸ்' எனும் கிராம விழிப்புணர்வு காவல் அலுவலர் திட்டம் கடந்த, 2021ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.
இத்திட்டத்தின் மூலம் 4 முதல் 5 கிராமங்களுக்கு ஒரு காவலர் நியமிக்கப்படுவார். தொடர்ந்து அரசியல் பிரமுகர்கள், அரசு அலுவலர்கள், முக்கியஸ்தர்கள் முன்னிலையில் காவலர் அறிமுக கூட்டம் நடக்கும்.
மேலும், ஊரில் உள்ள பொது இடத்தில் போலீசார் புகைப்படம், பெயர் மற்றும் தொடர்பு எண்ணுடன் கூடிய அறிவிப்பு பலகை அமைக்கப்படும்.
ஊர் பெயரில் 'வாட்ஸ்அப்' குழு உருவாக்கப்படும். அதில் ஊரில் உள்ளவர்களின் தொடர்பு எண்கள் சேர்க்கப்படும்.
வரவேற்பு
இதில் திருவிழா, விளையாட்டு போட்டி, அடிக்கடி ஏற்படும் பிரச்னைகள், திருட்டு உள்ளிட்ட பல்வேறு சம்பவங்கள் குறித்த தகவல்களை வாட்ஸ்அப் குழுவில் பதிவேற்ற பொது மக்களுக்கு அறிவுறுத்தப் படும்.
போலீசாரும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட கிராமங்களுக்கு அடிக்கடி சென்று பொதுமக்களை சந்தித்து பேசுவர். இத்திட்டம் பொதுமக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. குறிப்பாக, கிராமங்களில் நடைபெறும் சிறிய பிரச்னைகள் கூட உடனடியாக தெரிந்து கொள்ள போலீசாருக்கும் நல்ல வாய்ப்பாக இருந்தது.
ஆனால் போலீசார் பற்றாக்குறை, கூடுதல் பணிச்சுமை மற்றும் பணிமாறுதல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், அடுத்த ஓரிரு ஆண்டுகளுக்கு பின் முற்றிலுமாக கை விடப்பட்டது.
இத்திட்டத்தில் நியமிக்கப்பட்ட போலீசார், பணியிட மாற்றம் செய்யப்பட்ட பிறகு, தொடர்ந்து அங்கு வேறு யாரும் நியமிக்கப்படவில்லை.
மீண்டும் தேவை
இதனால் கிராமப்புறங்களில் நடக்கும் பிரச்னைகள், குற்ற சம்பவங்களை போலீசார் அறிந்து கொள்ள தாமதமாகிறது.
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், 'அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, மற்றும் கள்ள சந்தையில் மதுபாட்டில் விற்பனை, கஞ்சா கலாச்சாரம் கிராமங்களில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
போதைப்பழக்கத்திற்கு அடிமையாகும் இளைய தலைமுறையினர் வீண் தகராறு, வழிப்பறி உள்ளிட்ட குற்ற சம்பவங்களில் ஈடுபடுகின்றனர்.
அதனால் கிராம விழிப்புணர்வு காவல் அலுவலர் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த எஸ்.பி., ரஜத்சதுர்வேதி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்,' என்றனர்.