திருத்தப்பட்ட தமிழ் பாடப்புத்தகம் வரும் கல்வியாண்டில் அறிமுகம்

1

சென்னை: 'திருத்தப்பட்ட தமிழ் பாடப்புத்தகங்களை அச்சிடும் பணி துவங்கியிருப்பதால், வரும் கல்வியாண்டு முதல் நடைமுறைக்கு வரும்' என, பள்ளிக்கல்வி துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

பள்ளிக்கல்வி துறையில், 2017ம் ஆண்டில் வடிவமைக்கப்பட்ட தமிழ் பாடப்புத்தகங்கள் தான், தற்போது வரை நடைமுறையில் உள்ளன. தமிழ் புத்தகங்களில் பாடப்பகுதிகள் தற்போது அதிகமாக இருப்பதால், மாணவர்கள் படிப்பதில் சிரமத்தை சந்திக்கின்றனர்.

இதனால், பாடத்தை குறைக்க வேண்டும் என, பல்வேறு தரப்பில் இருந்தும் கோரிக்கைகள் வந்தன.

அதன்படி, ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான தமிழ் பாடப்புத்தகங்களில், நீண்ட பாட பகுதிகளை குறைக்கவும், பொருத்தமற்ற பகுதிகளை நீக்கி சீரமைக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

வல்லுனர்கள் மற்றும் பாடநுால் உருவாக்க குழுவினர் வழிகாட்டுதல்படி, ஒன்று மற்றும் இரண்டாம் வகுப்பு பாடநுால்களில் உரிய திருத்தங்கள் செய்யப்பட்டு உள்ளன.

அதேபோல, மூன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான பாடநுால்களில், சில பகுதிகள் குறைக்கப்பட்டுள்ளன.

ஆறு முதல், 8ம் வகுப்பு வரையிலான தமிழ் பாடநுால்களில் உள்ள ஒன்பது பிரிவுகளை எட்டாகவும்; ஒன்பது மற்றும் 10ம் வகுப்பு பாடநுால்களில் உள்ள ஒன்பது பிரிவுகளை, ஏழாகவும்; பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு பாடநுால்களில் ஆறாகவும் குறைத்துள்ளனர்.

அவ்வாறு சீரமைக்கப்பட்ட தமிழ் பாடப்புத்தகங்களை, அச்சிடுவதற்கான பணிகள் சமீபத்தில் துவங்கி நடைபெற்று வருகின்றன. வரும் ஜூனில் துவங்கும், 2025 - 26ம் கல்வியாண்டு முதல் இப்புத்தகங்கள் நடைமுறைக்கு வரும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement