கழிவுநீர் குட்டையான குளம் கோவிலம்பாக்கத்தில் அவலம்

கோவிலம்பாக்கம்:கோவிலம்பாக்கம் ஊராட்சியில் உள்ள கங்கையம்மன் கோவில் அடுத்து, ஸ்ரீனிவாச பெருமாள் கோவில் அமைந்துள்ளது. கங்கையம்மன் கோவிலுக்கான குளம், 1 ஏக்கர் பரப்பளவில் உள்ளது.

கோவில் திருவிழாவின்போது, இந்த குளத்தின் நீரை பயன்படுத்தி வந்தனர். காலப்போக்கில் குளத்தின் இருபுறமும் ஆக்கிரமிப்பால் சுருங்கியது.

மேலும், பல ஆண்டுகளாக பராமரிப்பின்றி போனது. இதனால், பாசி படிந்து துர்நாற்றம் வீசுகிறது.

இக்குளத்தின் ஒரு பக்க கரை, பரங்கிமலை- - மேடவாக்கம் சாலையை ஒட்டி அமைந்துள்ளது. அதனால், சாலையில் செல்வோர் பிளாஸ்டிக் உள்ளிட்ட குப்பையை குளத்தில் வீசி செல்கின்றனர்.

மேலும், பிரதான சாலையில் உள்ள உணவகங்கள் உள்ளிட்ட கடைகளின் கழிவு, குளத்தில் கொட்டப்பட்டு வருகிறது.

சுற்று வட்டார குடியிருப்பு வீடுகளின் கழிவுநீரும் குளத்தில் சங்கமிக்கிறது. ஒரு காலத்தில் தெய்வீகமாக இருந்த குளம், தற்போது துர்நாற்றம் வீசுவதால் அப்பகுதிவாசிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

எனவே, சம்பந்தப்பட்ட ஊராட்சியினர், அக்குளத்தின் ஆக்கிரமிப்புகளை அகற்றி, கரைகளை பலப்படுத்த வேண்டும்.

குளத்தை துார்வாரி சுத்தப்படுத்தி, வரும் பருவ மழைக்குள், மழைநீர் சேகரிப்பு மையமாக மாற்ற வேண்டும் என, அப்பகுதிவாசிகள் வலியுறுத்திஉள்ளனர்.

Advertisement