பிரதமரை அவமதிக்கும் வகையில் நடந்த முதல்வர்: மதுரையில் அண்ணாமலை குற்றச்சாட்டு

2

அவனியாபுரம்,: ''தமிழக மக்களுக்காக பணி செய்ய வந்த பிரதமரை அவமதிக்கும் வகையில் முதல்வர் ஸ்டாலின் நடந்து கொண்டுள்ளார்,'' என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

மதுரை விமான நிலையத்தில் அவர் கூறியதாவது:

பிரதமர் மோடி, 11 ஆண்டுகளில் நான்கு முறை ராமேஸ்வரம் வந்துள்ளார். தற்போது, 8,300 கோடி ரூபாய்க்கு திட்ட பணிகளை அறிவித்துள்ளார். ராம நவமி நாட்களில் விரதத்தில் இருந்து வருகிறார். புதிய ரயில் பாலத்தை திறந்து வைத்துள்ளார்.

நான்கு ஆண்டுகளுக்கு பின் தமிழகத்தில் நடைபெறக்கூடிய இந்த நிகழ்வில் முதல்வர் பங்கேற்கவில்லை.

அதற்காக அவர் கூறிய காரணம் ஏற்றுக்கொள்ள முடியாது. பிரதமரை வரவேற்க வேண்டியது நம் பிரதிநிதியாக உள்ள முதல்வரின் தலையாய கடமை. ஆனால், முதல்வர் வெயில் கொடுமையால் ஊட்டிக்கு சென்று விட்டார். பா.ஜ., இதை வன்மையாக கண்டிக்கிறது.

தமிழக மக்களுக்காக பணி செய்ய வந்த பிரதமரை முதல்வர் அவமதிக்கும் வகையில் நடந்து கொண்டுள்ளார். அதற்கு முதல்வர் மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.

தவறாக பேசுகிறார்



முதல்வர் ஊட்டியில் அமர்ந்து கொண்டு, ராமேஸ்வரம் வரும் பிரதமர் தொகுதி மறு சீரமைப்பு குறித்து பேச வேண்டும் எனக்கூறி வருகிறார்.

தொகுதி மறு சீரமைப்பு குறித்து முதல்வர் தவறாக பேசி வருகிறார். இதை ஒரு காரணமாக வைத்து ஊட்டியில் ஒளிந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. இங்கு இருக்கக்கூடிய அமைச்சர்கள் ஆங்கிலத்தில் தான் கையெழுத்திடுகின்றனர்.

மருத்துவ படிப்பு ஏன் தமிழில் கொடுக்கவில்லை என, பல்வேறு காரணங்களை சுட்டிக்காட்டி பிரதமர் பேசிஉள்ளார்.

ராமேஸ்வரத்தில் நடந்தது அரசு நிகழ்வு என்பதால், நான் மேடைக்கு பின்புறம் இருந்தேன். கோவிலில் சுவாமி தரிசனம் செய்தேன்.

ரகசியம் எங்கே?



அரசு நிகழ்ச்சிகளில் நான் மேடை ஏற முடியாது. அதனால் தான் மக்கள் பிரதிநிதியாக மத்திய அமைச்சர் முருகன், எம்.எல்.ஏ., நயினார் நாகேந்திரன் பங்கேற்றனர்.

இந்திராவை திட்டியவர் தான் கருணாநிதி. பின்னர், 'நேருவின் மகளே வருக; நிலையான ஆட்சி தருக' எனக் கூறினார். இவர்கள் தான், 'நீட்' தேர்வு ரத்து செய்யும் ரகசியம் உள்ளதாக கூறி ஆட்சிக்கு வந்தனர்.

நான்கு ஆண்டுகளாக அந்த ரகசியம் எங்கே உள்ளது. என்ன ரகசியம் என, தெரிவிக்கவில்லை.

நீட் தேர்வு குறித்து சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி ஜனாதிபதியிடம் அனுப்பிய போது அது திருப்பி அனுப்பப்பட்டது.

உப்புசப்பு இல்லாத காரணத்தை முன்வைத்து அடுத்தவர் கூட்டணி குறித்து பேசுவது, முதல்வர் வேலையில்லாமல் உள்ளார் என்பதை சுட்டிக்காட்டுகிறது.

நான் ஏற்கனவே பலமுறை கூறிவிட்டேன். தலைவர் போட்டியில் நான் இல்லை. தலைவராக இருந்தபோது என்ன பணிகளை செய்தேனோ, அதே பணியை தொண்டனாக இருக்கும் போதும் தொடர்வேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement