தக்காளி காய்ச்சல் மதுரையில் இல்லை

மதுரை, : மதுரை மாவட்டத்தில் தக்காளி காய்ச்சல் நோயாளிகள் கண்டறியப்படவில்லை.

இக்காய்ச்சல் வந்த நோயாளிகளின் உடலில் அம்மை போன்று உடலில் சிவப்பு தடிப்புகள் காணப்படும். இதுவரை மதுரையில் தக்காளி காய்ச்சல் நோயாளிகள் பதிவாகவில்லை.

அதேபோல டெங்கு காய்ச்சல், பொன்னுக்கு வீங்கி பாதிப்பும் இல்லை. வைரஸ் காய்ச்சலால் நேற்று 10 பேர் பாதிக்கப்பட்டனர். மொத்தம் 40 பேர் அரசு, தனியார் மருத்துவமனைகளில் காய்ச்சலுக்கு சிகிச்சை பெறுகின்றனர்.

கடந்த ஆகஸ்டில் குரங்கம்மை பரவ ஆரம்பித்த நிலையில் மதுரை விமான நிலையத்தில் 2024 ஆக. 17 முதல் வெளிநாட்டில் இருந்து வரும் பயணிகள் காய்ச்சல் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர். வெளிநாட்டு பயணிகள் விமான நிலையத்தில் இருந்து இறங்கி படிக்கட்டில் திரும்பும் போது 3 கேமராக்கள் கண்காணிக்கின்றன.

பயணிகள் நடந்து செல்லும் 20 மீட்டர் துாரம் வரை கண்காணிக்கும் கேமராக்கள் காய்ச்சல் நோயாளியாக இருந்தால் சிவப்பு சிக்னல் காண்பித்து எச்சரிக்கை செய்யும். ஏற்கனவே விமான நிலையத்தில் உள்ள சுகாதார குழுவினர் பயணிகளின் முழுமையான வெளிநாட்டு பயண விவரங்களை கேட்டறிந்து 108 ஆம்புலன்ஸ் மூலம் தோப்பூர் அரசு காசநோய் மருத்துவமனையில் சேர்க்க ஏற்பாடும் செய்யப்பட்டுள்ளது.

சோதனை ஆரம்பித்தது முதல் 2025 மார்ச் 31 வரை 604 விமானங்களில் வந்த 78 ஆயிரத்து 826 வெளிநாட்டு பயணிகளுக்கு காய்ச்சல் பரிசோதனை செய்ததில் யாருக்கும் குரங்கம்மை உறுதி செய்யப்படவில்லை.

ஆனாலும் கண்காணிப்பு தொடர்ந்து நடைபெறுகிறது.

Advertisement