சிவகங்கையில் பரவும் பொன்னுக்கு வீங்கி

சிவகங்கை : கோடையில் மம்ப்ஸ் என்ற பொன்னுக்கு வீங்கி வைரஸ் தொற்றால் சிவகங்கையில் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மம்ப்ஸ் என்ற வைரஸ் மூலம் பரவும் பொன்னுக்கு வீங்கி நோயானது காது மற்றும் தாடைக்கு இடையே உள்ள பகுதியில் வீக்கத்தை ஏற்படுத்தும்.

உமிழ்நீர் சுரப்பிகளில் இத்தகைய வீக்கம் உருவாவதால் கடுமையான வலி, காய்ச்சல் ஏற்படும். அதனுடன் தலைவலி, பசியின்மை, கன்னம் வீங்குதல், சோர்வு உள்ளிட்ட அறிகுறி இருக்கும்.

இவ்வகை வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் இருமல், தும்மல், சளி, உமிழ்நீர் வாயிலாக மற்றவர்களுக்கு பரவும். ஒரு வாரத்தில் இருந்து 14 நாட்களுக்குள் உடலுக்குள் வைரஸ் ஊடுருவி அறிகுறிகளை வெளிப்படுத்தும்.

இதற்கென தனியாக தடுப்பு மருந்து தேவையில்லை என்றாலும் நோய் பாதிக்கப்பட்டவர்கள் தனிமைப்படுத்தி இருந்தாலே பாதிப்பு சரியாகும் என டாக்டர்கள் கூறுகின்றனர். இந்த நோயில் அதிகம் குழந்தைகள் தான் பாதிக்கப்படுகின்றனர். சிவகங்கையில் 50க்கும் மேற்பட்ட குழந்தைகள் பொன்னுக்கு வீங்கியால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இருமல், தும்மல், சளி போன்றவற்றின் வாயிலாக மற்றவர்களுக்கு இந்நோய் பரவும் என்பதால் பொது இடங்கள், பள்ளிகள் போன்றவற்றில் முகக்கவசம் அணிதல், அடிக்கடி கைகளைக் கழுவுதல் போன்றவற்றைக் கடைபிடிக்க வேண்டும்.

பாதிக்கப்பட்ட குழந்தைகளை குறைந்தது ஒரு வாரம் தனிமைப்படுத்த வேண்டும் என டாக்டர்கள் அறிவுறுத்துகின்றனர்.

Advertisement