ஜிப்லி படங்கள் பதிவிடுகிறார்களா.. ரவுடிகள் கண்காணிப்பு! சமூகவலைதளங்களில் போலீசார் கவனம்

மேட்டுப்பாளையம்: ஜிப்லி படங்கள் டிரெண்டாகி வரும் நிலையில், ரவுடிகள் யாராவது ஜிப்லி படங்களோ அல்லது வேறு ஏதாவது பதிவுகளோ சமூக வலைதளங்களில் பதிவிடுகிறார்களா என மேட்டுப்பாளையம் போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
பேஸ்புக், இன்ஸ்டாகிராம், டிவிட்டர் என சமூக வலைதளங்கள் முழுவதும் தற்போது ஜிப்லி படங்கள் ட்ரெண்டாகி வருகிறது. அதாவது செல்பி எடுத்து, செயற்கை நுண்ணறிவு எனப்படும் ஏ.ஐ., செயலிகள் வாயிலாக பதிவேற்றம் செய்தால், ஜிப்லி படமாக அதுமாறி வரும்.
இதனை சமூக வலைதளங்களில் பிரபலங்கள் முதல் சாதாரண மக்கள் வரை தற்போது ஆர்வமுடன் பதிவிட்டு வருகின்றனர். இதை பயன்படுத்தி சைபர் மோசடி கும்பல்கள், மோசடிகளில் ஈடுபடவும் வாய்ப்புள்ளது.
இதுகுறித்து, மேட்டுப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சின்ன காமணன் கூறியதாவது:-
சைபர் கிரைம் மோசடிகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. போலி லிங்குகளை தொட்டு, சைபர் மோசடியில் சிக்கிக்கொள்ள வேண்டாம். ஜிப்லி படங்கள் தற்போது டிரெண்ட் ஆகி வருகிறது. இதை பயன்படுத்தி சைபர் கிரைம் கும்பல்கள் போலி ஏ.ஐ., செயலிகள் வாயிலாக பணம் மோசடி செய்ய வாய்ப்புள்ளது. இளைஞர்கள், பெரியோர் என அனைத்து தரப்பினரும் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்.
மேட்டுப்பாளையம் போலீசார் சார்பில் இளைஞர்கள், மக்களுக்கு சைபர் கிரைம் குற்றங்கள் தொடர்பாக தொடர் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. சைபர் கிரைம் தொடர்பான சந்தேகம் இருப்பின் போலீஸ் ஸ்டேஷனை அணுகலாம். மோசடி நடந்தால் 1930 என்ற எண்ணில் அழைக்கவும். ஜிப்லி படங்களை இன்ஸ்டா உள்ளிட்ட சமூக வலைதளங்களில் ரவுடிகள் யாராவது பதிவிடுகிறார்களா, அல்லது பிறர் மனம் புண்படும் வகையில் பதிவுகள் செய்யப்படுகிறதா, அல்லது பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் பதிவுகள் உள்ளதா என போலீசார் சமூக வலைதளங்கள் அனைத்தையும் தீவிரமாக கண்காணித்து வருகிறோம். யாருக்காவது மனம் புண்படும் படி பதிவுகள் இருந்தால், போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளிக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
மேட்டுப்பாளையம் டி.எஸ்.பி., அதியமான் கூறுகையில், ''டிஜிட்டல் அரஸ்ட், கூரியர் பொருட்கள் வந்துள்ளது போன்ற குற்றங்களில் ஈடுபடும், சைபர் கிரைம் மோசடி கும்பல்கள், நமது தொலைபேசி எண்களை, நாம் பதிவு செய்யும் ஹோட்டல் கூப்பன்கள் போன்ற பல தரப்பட்ட கூப்பன்களின் வாயிலாக எடுக்கின்றனர். அதே போல் ஜெராக்ஸ், பான் கார்டு, ஆதார் கார்டு போன்றவைகளை பொது இடங்களில் நாம் அளிப்பது, செயலிகளை மொபைலில் தரவிறக்கம் செய்யும் போது 'காண்டாக்ட் ஆக்சஸ்' கொடுப்பது போன்றவைகள் வாயிலாகவும் தொலைபேசி எண்கள் எடுக்கப்படுகிறது.
டிஜிட்டல் அரஸ்ட் என ஒன்று கிடையவே கிடையாது. பிரபல நிறுவனத்தின் பெயரை கூறி கூரியர் வந்துள்ளது அதில் பொருட்கள் உள்ளது என ஆசை வார்த்தை கூறினால் நம்ப வேண்டாம். இது போன்ற கும்பல்கள் தொடர்பு கொண்டால், அவர்களது ஐ.டி., கூரியர் எண் என அனைத்து தகவல்களையும் கேட்டு தெரிந்து, உண்மையான என உறுதி செய்ய வேண்டும்.
இளைஞர்கள் சமூக வலைதளங்களில் பதிவிடும் முன் ஆழ்ந்து யோசனை செய்து தான் பதிவிட வேண்டும். பெண்கள் தங்களது புகைப்படங்களை பதிவிடும் போது கவனம் தேவை. மோசடி கும்பல்கள் மார்பிங் செய்ய வாய்ப்புள்ளது,'' என்றார்.--
மேலும்
-
ஜெயலலிதாவுக்கு எதிராக குரல் கொடுக்க என்ன காரணம்; 30 ஆண்டுகள் கழித்து மனம் திறந்த ரஜினி
-
நீட் எதிர்ப்பு என்பது முதல்வரின் சுயநல நாடகம்: அண்ணாமலை குற்றச்சாட்டு
-
அமெரிக்காவில் இருந்து பயங்கரவாதி தஹாவூர் ராணா இந்தியாவுக்கு நாடு கடத்தல்; சிறையில் அடைக்க முடிவு
-
தைவானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; கட்டடங்கள் குலுங்கியதால் மக்கள் அச்சம்
-
ரெப்போ வட்டி விகிதம் 0.25% குறைத்தது ரிசர்வ் வங்கி: வீடு, வாகன கடன் வட்டி குறைய வாய்ப்பு
-
மறைந்த குமரி அனந்தனுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு: முதல்வர் ஸ்டாலின்