ப்ளூடூத் போட்டு வாகனம் ஓட்டுபவர்கள் அதிகரிப்பு; விபத்துகளை தவிர்க்க தேவை கடும் நடவடிக்கை

3

கோவை; ப்ளூடூத், ஹெட்செட் அணிந்து கொண்டு விதிமீறி வாகனம் ஓட்டுபவர்களால் விபத்துகள் ஏற்படுவதாக புகார் தெரிவிக்கப்படுகிறது.

'எவ்வளவு அடித்தாலும் தாங்கவோம்ல' என்பது போல் அரசு அனைத்து நடவடிக்கைகளை மேற்கொண்ட போதும், விதிமீறுபவர்கள் எண்ணிக்கை குறைந்தபாடில்லை. போக்குவரத்து போலீசாரும் பலவழிகளில் விதிமீறல்களில் ஈடுபடுவோரை பிடித்து அபராதம் விதிக்கின்றனர். ஆனால், புதுப்புது விதங்களில் விதிமீறல்களில் ஈடுபடுகின்றனர் வாகன ஓட்டிகள்.

அந்த விதத்தில் தற்போது ப்ளூடூத், ஹெட்செட் அணிந்து கொண்டு, பேசியபடியும், சினிமா பாடல்களை கேட்டுக் கொண்டும் வாகனங்கள் இயக்குவது அதிகரித்துள்ளது. இவ்வாறு, ப்ளூடூத், ஹெட்செட் அணிந்து கொண்டு வாகனத்தை இயக்குவதால் கவன சிதறல் ஏற்பட்டு அதனால், எதிரில் வரும் வாகனத்துடன் மோதி விபத்து ஏற்படுகிறது.

மேலும், வாகனம் ஓட்டும் போது, காதுகளில் ப்ளூடூத், ஹெட்செட் அணிந்து கொண்டு பேசுவது, சினிமா பாடல்களை கேட்பதால், பின்னால் வரும் வாகனங்கள் எழுப்பும் ஒலி, ஆம்புலன்ஸ்களின் ஒலி ஆகியவை கேட்பதில்லை. இதன் காரணமாகவும் விபத்துகள் ஏற்படுகின்றன. இவ்வகையான விபத்துகளில் பலரும் உயிரிழப்பது, கை, கால் உள்ளிட்ட உறுப்புகளை இழக்கும் சம்பவங்களும் நடக்கின்றன. இதைக்கருத்தில் கொண்டு இத்தகைய போக்குவரத்து விதிமீறல்களையும் கருத்தில் கொண்டு அபராதம் விதிக்க வேண்டும் என, வலியுறுத்தப்படுகிறது.

இதில் வேடிக்கை என்னவென்றால் ப்ளூடூத், ஹெட்செட் அணிந்து கொண்டு வாகனம் ஓட்டுபவர்களுக்கு தனியாக அபராதம் விதிக்க முடிவதில்லை. மொபைல் பேசியபடி வாகனம் இயக்குவதற்கான அபராதமே வசூலிக்கப்படுகிறது. தொழில்நுட்பம் வளர்ந்துள்ள நிலையில், அதை ஏற்றுக்கொள்வது அவசியமானது. ஆனால், அந்த தொழில்நுட்பத்தால் தொடர் உயிரிழப்புகள் ஏற்படுவதையும் தடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

கோவை மாநகர போக்குவரத்து போலீஸ் துணை கமிஷனர் அசோக்குமார் கூறுகையில்,''கோவை மாநகரில் மொபைல் போன் பேசியபடி வாகனங்கள் இயக்குவோருக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. ப்ளூடூத், ஹெட்செட் அணிந்து கொண்டு வாகனம் ஓட்டுபவர்களுக்கு அபராதம் விதிக்க பிரத்யேக சட்டம் இல்லை. அதனால் அவர்களுக்கும் அதே சட்டத்தின் கீழ் தான் அபராதம் விதிக்கப்படுகிறது. மேலும், ஹெல்மெட்டுக்குள் ப்ளூடூத் இருப்பதால் அவர்களை கண்டறிவது மிகவும் சிரமமான ஒன்றாக உள்ளது. கார்களில் ப்ளூடூத், ஹெட்செட் அணிந்து கொண்டு செல்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது,'' என்றார்.

அபராதம் செலுத்தியவர்கள் விபரம்

கடந்த 2024 ம் ஆண்டு மொபைல்போன் பேசியபடி வாகனம் இயக்கியதாக, 5,771 வழக்குகள் பதியப்பட்டுள்ளன. அதில் 1,545 பேர் அபராதம் செலுத்தியுள்ளனர். நடப்பாண்டு பிப்., 28 வரை, 1,968 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்ட நிலையில் அவர்களில், 481 பேர் அபராதத்தைசெலுத்தியுள்ளனர்.

Advertisement