நீர் நிலையில் குப்பை கொட்டிய லாரி சிறைபிடிப்பு

பல்லடம்; சுல்தான்பேட்டை ஒன்றியம், குமாரபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட செல்லியகவுண்டன்புதுார் கிராமத்தில் உள்ள நீரோடையில் குப்பைகள் கொட்ட வந்த லாரியை கிராம மக்கள் சிறை பிடித்தனர்.

பொதுமக்கள் கூறுகையில், 'விவசாயத் தொழில் நிறைந்த குமாரபாளையம் ஊராட்சியில் சுகாதாரம் பின்பற்றப்பட்டு வருகிறது. ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், விதிமுறைகள் மீறி, குப்பைகள் கழிவுகள் உள்ளிட்டவை அதிக அளவில் கொட்டப்பட்டு வருகின்றன.

செஞ்சேரிமலை அடிவாரத்திலும், ஆரம்ப சுகாதார நிலையம் அருகிலும் குப்பைகள் அதிக அளவில் கொட்டப்படுகின்றன. இதனால், கிராமத்தின் சுகாதாரம் கேள்விக்குறியாகி வருகிறது.

மேலும், எங்கிருந்தோ கொண்டு வந்து கொட்டப்படும் நச்சுத்தன்மை கொண்ட குப்பைகள் கழிவுகளால், நிலத்தடி நீர் மாசடைகிறது.

பலமுறை பொதுமக்கள் எச்சரித்தும், சிலர், டன் கணக்கில் கழிவுகள் குப்பைகளை கொட்டி வருகின்றனர். விதிமுறை மீறி கழிவுகள், குப்பைகளை கொட்டுபவர்களை கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.

''லாரி உரிமையாளர் மீது அபராதம் விதிப்பதுடன், வழக்குப்பதிவு செய்ய வேண்டும். தொடர்ந்து, இது போன்ற விதிமீறல் செயல்களில் ஈடுபடுபவர்களின் வாகனங்களை பறிமுதல் செய்ய வேண்டும்'' என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

Advertisement