மே 1 முதல் தமிழில் பெயர் பலகை அமைக்காவிட்டால்  அபராதம்

மதுரை : ''வணிக, உணவு நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் தமிழில் பெயர் பலகை அமைக்க தவறினால் மே 1 முதல் அபராதம் விதிக்கப்படும்'' என தொழிலாளர் துறை எச்சரித்துள்ளது.

மதுரையில் தொழிலாளர் துறை சார்பில் வணிக, உணவு நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் தமிழில் பெயர் பலகை அமைத்தல் தொடர்பான கூட்டம் கலெக்டர் சங்கீதா தலைமையில் நடந்தது. மாநகராட்சி கமிஷனர் சித்ரா, தொழிலாளர் உதவி கமிஷனர் கார்த்திகேயன், தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்க துணைத் தலைவர் செல்வம், மதுரை ஓட்டல் உரிமையாளர் சங்க பி.ஆர்.ஓ., பாலசுப்பிரமணியன், தமிழ்நாடு ஜவுளி வணிகர்கள் சங்க துணைத் தலைவர் வெங்கட்ராமன் பங்கேற்றனர்.தமிழ்நாட்டில் உள்ள கடைகள், நிறுவனங்களுக்கான சட்டப்படி நிறுவனங்களில் பெயர் பலகை தமிழில் இருக்க வேண்டும். பிற மொழிகளில் பெயர் வைத்திருந்தாலும் தமிழில் பெரிய எழுத்துக்களாக இருக்க வேண்டும். அதன்பின் ஆங்கிலம், பிற மொழிகளில் இருக்கலாம்.

மேலும் இவ்விதிகளை பின்பற்றாத நிறுவனங்களுக்கு 2 ஆண்டுகள் சிறை அல்லது ரூ. 1லட்சம் அபராதம் அல்லது இரண்டும் வழங்கலாம். இரண்டாம் முறை தவறு செய்தால் தினமும் ரூ. 10 ஆயிரம் அபராதம் விதிக்க விதிகள் உள்ளன. ஏப். 15 முதல் 30 வரை உள்ளாட்சி மன்ற பகுதிகளில் நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் விழிப்புணர்வு கூட்டம் நடத்த வேண்டும்.

மே 1 முதல் 15 வரை தமிழில் பெயர் பலகை உள்ளதா என ஆய்வு மேற்கொள்ள வேண்டும். அதை நிறைவேற்றாத நிறுவனங்களிடம் விளக்கம் கேட்டு அறிவிப்பு வழங்க வேண்டும். அதன்பின் சட்டப்படி தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ஆலோசனை வழங்கப்பட்டது.

Advertisement