108 ஆம்புலன்ஸ் டிரைவர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க கோரிக்கை

புதுச்சேரி; 108 ஆம்புலன்ஸ் டிரைவர்களுக்கு வருடாந்திர ஊதிய உயர்வு வழங்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

புதுச்சேரியில் விபத்தில் சிக்கி காயமடைவோர், கர்ப்பிணிகள், நோயாளிகளை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல 108 ஆம்புலன்ஸ் இயங்கி வருகிறது. புதுச்சேரியில் 8, காரைக்காலில் 5, ஏனாமில் 1 என, 14 ஆம்புலன்ஸ் இயங்கி வருகிறது. இதில், 63 டிரைவர்கள் பணிபுரிகின்றனர்.

ஆம்புலன்ஸ் டிரைவர்களுக்கு ஆண்டு தோறும் வழங்கப்படும் தீபாவளி போனஸ், வருடந்தோறும் உயர்த்தப்படும் 5 சதவீத ஊதியம் உயர்த்தப்படவில்லை.

கொரோனா காலத்தில் பணியாற்றிய ஊழியர்களுக்கு வழங்கப்படும் என, அறிவித்த ரூ. 5,000 பணமும் வழங்கப்படவில்லை. ஊதிய உயர்வு மற்றும் போனஸ் வழங்க வலியுறுத்தி 108 ஆம்புலன்ஸ் டிரைவர்கள் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தியும் இதுவரை ஊதிய உயர்வு அளிக்கவில்லை.

கடந்த சட்டசபை கூட்டத்தில், தேசிய சுகாதார இயக்ககம் (என்.ஆர்.எச்.எம்.,) ஊழியர்களுக்கு முதல்வர் ரங்கசாமி சம்பள உயர்வு அறிவித்தார்.

அப்போது, ஆம்புலன்ஸ் டிரைவர்களுக்கு சம்பள உயர்வு அறிவிப்பு வரும் என காத்திருந்த டிரைவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. என்.ஆர்.எச்.எம்., ஊழியர்களைபோல், 108 ஆம்புலன்ஸ் டிரைவர்களுக்கும் சம்பள உயர்வு அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆம்புலன்ஸ் டிரைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement