குப்பை வாகனம் ஓட்டும் கிராம பஞ்சாயத்து தலைவி

தட்சிண கன்னடாவின் பன்ட்வால் தாலுகா, பெருவாய் கிராம பஞ்சாயத்து தலைவி நபீசா. இவர், கிராம பஞ்சாயத்தில் உள்ள குப்பை சேகரிக்கும் வாகனத்தை ஓட்டி சென்று வீடு, வீடாக குப்பை சேகரித்து வருகிறார். இவரது புதிய முயற்சிக்கு கிராம மக்களிடம் இருந்து பாராட்டு கிடைக்கிறது.

இது பற்றி நபீசா கூறியதாவது:

முஸ்லிம் சமூகத்தை சேர்ந்த நான், மூன்று குழந்தைகளின் தாய். இரண்டு பிள்ளைகள் பள்ளிக்கு செல்கின்றனர். 1 வயதில் மகன் உள்ளார். கிராம பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிட்ட போது, உறவினர்கள் சிலர் என்னிடம், முஸ்லிம் சமூகத்தை சேர்ந்த உனக்கு, ஹிந்துக்கள் ஓட்டு போட மாட்டார்கள் என்று கூறினர்.

ஆனால், நான் நம்பவில்லை. ஹிந்து மக்களும் என்னை ஆதரிப்பர் என்ற நம்பிக்கை இருந்தது. அதன்படி தேர்தலில் அனைத்து சமூகத்தினரும் என்னை ஆதரித்து வெற்றி பெற செய்து 2வது வார்டு கவுன்சிலர் ஆக்கினர். பின், தலைவராகவும் தேர்வு செய்யப்பட்டேன்.

கிராம பஞ்சாயத்தில் பெண்களே அனைத்து பணிகளையும், முன்நின்று செய்ய வேண்டும் என்று முடிவு எடுத்தோம். கடந்த ஏழு மாதங்களுக்கு முன்பு, அரசு சார்பில் குப்பை சேகரிக்கும் வாகனம் கிடைத்தது. அந்த வாகனத்தை பெண் ஒருவர் தான் ஓட்ட வேண்டும் என்று நினைத்தோம். ஆனால் கிராம பஞ்சாயத்தில் வேலை செய்யும் பெண்கள் யாரும், வாகனத்தை ஓட்ட முன்வரவில்லை. எனக்கு கார் ஓட்ட தெரியும் என்பதால், குப்பை சேகரிக்கும் வாகனத்தை நானே ஓட்டுகிறேன் என்று கூறினேன்.

தற்போது தினமும் காலை 10:00 மணிக்கு வேலைக்கு செல்கிறேன். அலுவலக கோப்புகளை பார்த்து விட்டு, குப்பை சேகரிக்கும் வண்டியை ஸ்டார்ட் செய்கிறேன். என்னுடன் குப்பை சேகரிக்க, கிராம பஞ்சாயத்தில் வேலை செய்யும், ஐந்து பெண்கள் வருகின்றனர். முதலில் என்னை நிறைய பேர் கிண்டல் செய்தனர். ஆனால் தற்போது பாராட்டுகின்றனர்.

குப்பை கழிவுகளை சாலையில் வீசக்கூடாது. அப்படி செய்தால் 500 ரூபாய் அபராதம் என்று, மக்களுக்கு எச்சரிக்கை விடுத்து உள்ளேன். வயதானவர்களுக்கு என்னால் முடிந்த உதவிகளை செய்கிறேன்.

பெருவாய் கிராமத்தில் உள்ள அரசு பள்ளிக்கு அடிக்கடி சென்று, திறமையான மாணவர்களை கண்டறிந்து அவர்களை ஊக்குவிக்கிறேன். அனைத்து சமூகத்தினரும் என்னுடன் நல்லபடியாக பழகுகின்றனர். இந்த பதவியில் இருக்கும் வரை, என்னால் முடிந்த மாற்றத்தை கொண்டு வருவேன்.

இவ்வாறு அவர் கூறினார்.




- நமது நிருபர் -

Advertisement