66 வயதில் மளமள வென மலை ஏறிய முன்னாள் என்.சி.சி., மாணவி

மைசூரு லட்சுமிபுரம் பள்ளி, சாரதா விலாஸ் உயர்நிலைப்பள்ளி மற்றும் மகாராணி கல்லுாரி மாணவியான ஷியாமளா பத்மநாபன், 1982 - -84ல் ஜர்னலிசம் படிப்பில் முதுகலை பட்டம் பெற்றார். மைசூரு மகாராணி கல்லுாரியில் படிக்கும் போது, மலையேறும் பயிற்சியில் ஈடுபட்டார். இக்கல்லுாரியில் என்.சி.சி.,யில் பயிற்சி பெற்றார். அப்போது, சாமுண்டி மலையில் தேசிய சாகச அறக்கட்டளையுடன் இணைக்கப்பட்ட ஸ்கூல் ஆப் அட்வெஞ்சர் நடத்திய, பாறை ஏறும் ஏறுதல் பயிற்சியில் சேர்ந்தார்.

வெளிநாடு பயணம்



புதுடில்லியில் 1979 குடியரசு தின அணிவகுப்பில் கர்நாடகா, கோவாவை பிரதிநிதித்துவப்படுத்தியதற்காக பதக்கம் கிடைத்தது. தொடர்ந்து மலையேற்ற பயிற்சியில் ஈடுபட்டார். மேற்படிப்புக்காக வெளிநாடு சென்றார்.

இந்தியா திரும்பிய பின், பெங்களூரில் உள்ள டி.சி.எஸ்., எனும் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனத்தில் இணைந்தார். 2009ல், 'டாடா பிட் பார் லைப் முயற்சியை அறிமுகப்படுத்தியது.

இது ஊழியர்களுக்கு மாரத்தான்களுக்கு பயிற்சி அளிக்கிறது. 2010 ல் பயிற்சியில் சேர்ந்தார். 2011 - 2020 இடையே, பல்வேறு வகையான மாரத்தான்களில் பங்கேற்றார்.

இமயமலை பயணம்



பணியிலிருந்து ஓய்வு பெற்ற பின், பிரதமர் மோடியின் 'பிட்' இந்தியா இயக்கத்தின் கீழ் ஏதாவது ஒன்றை துவங்க விரும்பினார். 'பிட் அட் 50 பிளஸ்' என்ற மகளிர் இமயமலை பயணம், 2022ல் நடந்தது. இதில், ஷியாமளா, தனது 66 வது வயதில் பங்கேற்றார். இதற்காக சாமுண்டி மலையில், 5 கிலோ எடையுள்ள பழைய புத்தகங்கள், நாளிதழ்கள் நிறைந்த ஒரு பையையும் சுமந்து, தினமும் 15 - -20 கி.மீ., துாரம் பயிற்சி செய்தார்.

புகழ்பெற்ற மலையேற்ற வீரர் பச்சேந்திரி பால் தலைமையில், 141 நாட்கள், 4,977 கி.மீ., துாரம் பயணித்து, மலைப்பகுதியில் சாதனை படைத்தார். இது போன்று பல சாதனைகள் செய்து உள்ளார்.



- நமது நிருபர் -

Advertisement