அங்கன்வாடி பணி கலெக்டர் அழைப்பு

கள்ளக்குறிச்சி : மாவட்டத்தில் காலியாக உள்ள அங்கன்வாடி பணியாளர், குறு அங்கன்வாடி பணியாளர் மற்றும் உதவியாளர் பணியிடத்திற்கு தகுதியுள்ள பெண்கள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் பிரசாந்த் தெரிவித்துள்ளார்.

அவரது செய்திக்குறிப்பு:

மாவட்டத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட பணிகளின் கீழ் செயல்படும் குழந்தைகள் மையங்களில் காலியாக உள்ள, 138 அங்கன்வாடி பணியாளர், 14 குறு அங்கன்வாடி பணியாளர் மற்றும் 133 அங்கன்வாடி உதவியாளர் பணியிடங்கள் நேரடியாக நியமனம் செய்யப்பட உள்ளது.

இதற்கான இன சுழற்சி மற்றும் முன்னுரிமை விபரங்கள் அந்தந்த வட்டார குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலக தகவல் பலகையில் ஒட்டப்பட்டுள்ளது. பணி நியமனம் செய்யப்படுபவர்கள் தொகுப்பூதியம் அடிப்படையில் 12 மாதங்களுக்கு பணிபுரிய வேண்டும். அதன்பிறகு, கால முறை ஊதியம் வழங்கப்படும்.

பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு படித்த, தமிழ் எழுத படிக்க தெரிந்த பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். அரசாணைப்படி விதவை, ஆதரவற்ற பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். www.icds.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்யலாம். பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன் பள்ளி மாற்று சான்றிதழ், 10 மற்றும் பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ், குடும்ப அட்டை, ஆதார் அட்டை, ஜாதி சான்று மற்றும் வாக்காளர் அடையாள அட்டை இணைத்து அந்தந்த வட்டார குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகத்தில் வரும், 23ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். நேர்க்காணலின் போது அழைப்பு கடிதம் மற்றும் அசல் சான்றிதழ்களுடன் குறித்த நேரத்தில் பங்கேற்க வேண்டும். மேலும் விவரங்களை http://kallakurichi.nic.in என்ற இணையதள முகவரியில் தெரிந்து கொள்ளலாம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Advertisement