வக்ப் திருத்த சட்டத்தை மேற்கு வங்கத்தில் அமல்படுத்த மாட்டோம்; முதல்வர் மம்தா பானர்ஜி

கோல்கட்டா: மேற்கு வங்க மாநிலத்தில் வக்ப் திருத்த சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என்று முதல்வர் மம்தா பானர்ஜி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
பார்லிமென்டில் நடந்த காரசாரமான விவாதங்களுக்கு மத்தியில், இரு அவைகளிலும் வக்ப் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து, ஜனாதிபதி ஒப்புதல் அளித்த நிலையில், நேற்று முதல் வக்ப் திருத்த சட்டம் நாடு முழுவதும் அமலுக்கு வந்துள்ளது.
இந்த நிலையில், கோல்கட்டாவில் ஜெயின் சமூகத்தினர் சார்பில் நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, மேற்கு வங்க மாநிலத்தில் வக்ப் திருத்த சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என்று திட்டவட்டமாக கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது: வக்ப் திருத்த சட்டம் கொண்டு வரப்பட்டதால், நீங்கள் வருத்தப்பட்டிருப்பது எனக்கு தெரியும். நம்பிக்கையாக இருங்கள், மேற்கு வங்கத்தில் பிரித்தாளும் ஆட்சி ஒருபோதும் நடக்காது. வங்கதேசத்தின் நிலைமையை பாருங்கள். இப்படியிருக்கும் போது, வக்ப் மசோதாவை தற்போது நிறைவேற்றி இருக்கக் கூடாது, எனக் குறிப்பிட்டுள்ளார்.







