மின்னலில் விழுந்த 52 அடி உயர துாண்

காரியாபட்டி: 800 ஆண்டுகள் பழமையான 52 அடி உயரம் உள்ள மடை துாண் இடி மின்னலுக்கு உடைந்து சேதமானது.

காரியாபட்டி கட்டுக் குத்தகை கரிசல்குளத்தில் 800 ஆண்டுகளுக்கு முன் பாண்டிய மன்னர்கள் காலத்தில் 10 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில், 30 கி.மீ. சுற்றளவில் கண்மாய் இருந்துள்ளது. விவசாயிகள் முழு நேர விவசாயத்தில் ஈடுபட்டுள்ளனர். விவசாயத்திற்காக 3 மடைகள் ஏற்படுத்தப்பட்டன.

ஒரே கல்லில் 52 அடி உயரத்திற்கு தலா 6 துாண்கள், 9 குறுக்கு விட்டம் தலா 3 வீதம் செதுக்கப்பட்டன. தெற்கு, கிழக்கு, வடக்கு என மடைகள் ஏற்படுத்தப்பட்டன. இதன் மூலம் வயல்களுக்கு தண்ணீர் பாய்ச்சப்பட்டு பெரிய அளவில் விவசாயம் நடைபெற்றன. ஒருமுறை கண்மாய் உடைப்பு ஏற்பட்டதால் பெரும்பாலான பயிர்கள் நீரில் மூழ்கின. அதற்குப்பின் மெல்ல மெல்ல விவசாயம் குறைய தொடங்கியது.

அதற்குப்பின் மடைகளில் நடப்பட்டிருந்த துாண்கள் 20 அடி உயரத்திற்கு மண் மேவி அசைக்க முடியாத அளவில், முக்கிய அடையாளங்களாக இருந்து வருகின்றன. அப்பகுதி மக்கள் கல்லுமடை கருப்பசுவாமி, முனியாண்டியாக வழிபட்டு வருகின்றனர். இந்நிலையில் வடக்கில் இருந்த துாண்களில் ஒன்று நேற்று முன்தினம் இரவு பெய்த கன மழையின் போது விழுந்த இடி மின்னலுக்கு இரண்டாக முறிந்து விழுந்தது. மிகப் பழமையான துாண் விழுந்தது. இதை அப சகுணமாக கருதி கிராமத்தில் சோகத்தில் உள்ளனர்.

Advertisement