ரூ.1 லட்சம் மின்கட்டண பாக்கியா? நடிகை கங்கனா - காங்., அரசு மோதல் நடிகை கங்கனா குற்றச்சாட்டால் பரபரப்பு

மண்டி: 'ஆளே இல்லாத வீட்டுக்கு எப்படி 1 லட்சம் ரூபாய் மின் கட்டணம் வரும்?' என, கேள்வி எழுப்பிய, நடிகையும், பா.ஜ., - எம்.பி.,யுமான கங்கனா ரணாவத்துக்கு, ஹிமாச்சல் மாநில காங்கிரஸ் அரசு பதிலடி கொடுத்துள்ளது.

நிலுவைத்தொகை



ஹிமாச்சலில் முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு தலைமையில், காங்., ஆட்சி நடக்கிறது. 2024 லோக்சபா தேர்தலில் இங்குள்ள மண்டி தொகுதியில், பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத், பா.ஜ., சார்பில் போட்டியிட்டு வென்று எம்.பி., ஆனார்.

சமீபத்தில், தன் சொந்த தொகுதியில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற கங்கனா ரணாவத், 'மணாலியில் உள்ள என் வீட்டிற்கு ஒரு மாத மின்கட்டணமாக, 1 லட்சம் ரூபாய், 'பில்' வந்துள்ளது.

'இத்தனைக்கும் நான் அந்த வீட்டில் வசிக்கக்கூட இல்லை. அந்த வீடு பூட்டிக் கிடக்கிறது. இது மிகவும் மோசமான நிலை' என்றார்.

இதற்கு விளக்கம் அளித்த ஹிமாச்சல் மின்வாரியம், 'நிலுவைத்தொகை உட்பட, ஜன., - பிப்ரவரி மாதங்களுக்கான கட்டணத்தையும் சேர்த்து தான், 90,384 ரூபாய் செலுத்தும்படி பில் அனுப்பப்பட்டுஉள்ளது.

'சரியான நேரத்தில் கட்டணத்தை செலுத்தியிருந்தால், தொகை குறைந்திருக்கும்' என, விளக்கம் அளித்தது.

தொழிற்சாலை



இந்த விவகாரம் தொடர்பாக, மறைந்த முன்னாள் முதல்வர் வீர்பத்ர சிங்கின் மகனும், ஹிமாச்சல் பொதுப்பணித்துறை அமைச்சருமான விக்ரமாதித்ய சிங் கூறுகையில், “கங்கனா ரணாவத் குறும்பு செய்கிறார். உரிய நேரத்தில் மின்கட்டணத்தை அவர் செலுத்தவில்லை.

'கட்டணத்தை செலுத்தும்படி கூறினால், உடனே மாநில அரசை சபிக்கிறார்; இது எந்த விதத்தில் நியாயம்?” என, கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த கங்கனா, “விக்ரமாதித்ய சிங் ராஜா என்றால், நான் ஒரு ராணி. முன்பு, 5,000 ரூபாயாக இருந்த மின்கட்டணம், தற்போது, 80,000 ரூபாயாக அதிகரிக்க என்ன காரணம்? என் வீட்டில் தொழிற்சாலையா உள்ளது?” என்றார்.

Advertisement