விளைச்சல் இருந்தும் விற்பனையில்லை; அழுகும் தர்ப்பூசணி; அழும் விவசாயிகள்

4

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில், பல்வேறு பகுதிகளில் தர்ப்பூசணி நல்ல விளைச்சல் கண்டுள்ள நிலையில், கொள்முதல் செய்ய வியாபாரிகள் முன் வராததால், அவை, தோட்டத்திலேயே அழுகுவதால், விவசாயிகள் கண்ணீர் வடிக்கின்றனர்.

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி, அறந்தாங்கி, கறம்பக்குடி, கீரனுார், ஆலங்குடி, கந்தர்வகோட்டை, கிள்ளுக்கோட்டை, ராசியமங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், 5,000 ஏக்கரில் விவசாயிகள் தர்ப்பூசணி பயிரிட்டுள்ளனர்.

தர்ப்பூசணி பழங்களை 60 -- 70 நாட்களுக்குள் அறுவடை செய்து, விற்பனைக்காக அனுப்ப வேண்டும்.

இவற்றை, மொத்த வியாபாரிகள் கொள்முதல் செய்து, பிற மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களுக்கு அனுப்பி வைப்பர். தற்போது, வரத்து அதிகரிப்பு மற்றும் தர்ப்பூசணி பழங்களில் ரசாயனம் கலந்திருப்பதாக தகவல் வெளியானதால் விற்பனை மந்தமானது.

இதனால், தர்ப்பூசணி பழங்களை, கிலோ கணக்கில் கூட வாங்க யாரும் வருவதில்லை.

அறுவடை செய்யாமல், மழையிலும், வெயிலிலும் தோட்டங்களில் கிடப்பதால், பழங்கள் அழுகிவிட்டன. டிராக்டரில் உழவு செய்தும், குப்பையில் கொட்டியும் தர்ப்பூசணிகளை விவசாயிகள் அழித்து வருகின்றனர்.

வேளாண்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் கள ஆய்வு மேற்கொண்டு, உரிய இழப்பீடு வழங்க தமிழக அரசு முன் வரவேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

ரூ.70,000 இழப்பீடு எதிர்பார்ப்பு

வதந்தி பரப்பியதில் பெரும் சதி நடந்துள்ளது. நாவல் பழம், தர்ப்பூசணி போன்றவற்றில் இயற்கையாகவே நிறம் இருப்பதும், அதை சாப்பிடும்போது நிறம் வருவதும் இயல்பு தான். வருங்காலங்களில் இதுபோன்ற வதந்திகளை தடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு, ஏக்கருக்கு 70,000 ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும்.சக்திவேல்ஒருங்கிணைப்பாளர், தமிழ்நாடு ஒருங்கிணைந்த தர்ப்பூசணி விவசாயிகள் குழு

Advertisement