மகா கேவலமாக பேசிவிட்டு மன்னிப்பு கேட்கிறார் பொன்முடி

82


சென்னை: பெண்களையும், சைவ, வைணவ சமயங்களையும் மகா கேவலமாக பேசிய ஆபாச பேச்சு அமைச்சர் பொன்முடி, அனைத்து தரப்பிலும் எதிர்ப்பு கிளம்பியதை தொடர்ந்து மன்னிப்பு கேட்பதாக அறிக்கை வெளியிட்டு உள்ளார்.


விழுப்புரத்தில் கடந்த 6 ம் தேதி பெரியார் திராவிடர் கழகம் சார்பில் நடந்த நிகழ்ச்சியில் அமைச்சர் பொன்முடி பங்கேற்றார். விலைமாதுவுடன் சைவம், வைணவம் சமயங்களை தொடர்புப்படுத்தி மிகவும் ஆபாசமாக கொச்சைப்படுத்தி பேசினார். பெண்கள் பங்கேற்ற இந்த நிகழ்ச்சியில் மிகவும் அசிங்கமான வார்த்தைகளை அவர் பயன்படுத்தியது அனைவரையும் முகம் சுளிக்க வைத்தது. அவருக்கு அனைத்து தரப்பிலும் கடும் எதிர்ப்பு எழுந்தது. அவரது கட்சி பதவி பறிக்கப்பட்டது. அமைச்சர் பதவி பறிப்பு எப்போது என அனைத்து தரப்பிலும் கேள்வி எழுப்பப்படுகிறது.


அனைத்து தரப்பிலும் இருந்து எதிர்ப்பு கிளம்பியதைத் தொடர்ந்து பொன்முடி மன்னிப்பு கேட்டுள்ளார்.


அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: உள் அரங்கக் கூட்டத்தில், தகாத பொருளில் தவறான சொற்களைப் பயன்படுத்தி நான் பேசிய பேச்சுக்கு மனப்பூர்வமாக மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்.

இந்தத் தகாத கருத்தை நான் பேசியது குறித்து உடனடியாக மனப்பூர்வமாக வருந்தினேன். நீண்ட காலம் பொது வாழ்க்கையில் உள்ள எனக்கு இதுபோன்ற தடுமாற்றம் ஏற்பட்டது குறித்து நான் மிகவும் வருந்துகிறேன். பலருடைய மனதைப் புண்படுத்தும் வகையில் இப்பேச்சு அமைந்து விட்டது குறித்தும், அவர்கள் தலைகுனியும் சூழல் ஏற்பட்டது குறித்தும் நான் மிகவும் மனம் வருந்துகிறேன்.

மனம் புண்பட்ட அனைவரிடமும் நான் பேசிய பேச்சுக்கு மீண்டும் மீண்டும் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் பொன்முடி கூறியுள்ளார்.

Advertisement