மேற்கு வங்கத்தில் வக்ப் சட்டத்தை அமல்படுத்த மாட்டோம்; மம்தா உறுதி

20

கோல்கட்டா: மேற்கு வங்க மாநிலத்தில் வக்ப் சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி உறுதி அளித்து உள்ளார்.


மத்திய அரசு கொண்டு வந்த வக்ப் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மேற்கு வங்க மாநிலத்தில் நேற்று போராட்டம் நடந்தது. இதில் ஏற்பட்ட வன்முறையில் 15 போலீசார் காயமடைந்து உள்ளனர்.அரசு வாகனங்கள், ரயில்வே அலுவலகம், போலீஸ் சோதனைச்சாவடிகள், கடைகள் உள்ளிட்டவை சேதப்படுத்தப்பட்டதுடன், தீ வைக்கப்பட்டது.


இந்நிலையில், முதல்வர் மம்தா பானர்ஜி வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: இந்த விவகாரத்தில் எங்களின் நிலைப்பாட்டை நாங்கள் தெளிவாக எடுத்துக் கூறியுள்ளோம். இச்சட்டத்தினை நாங்கள் ஆதரிக்கவில்லை. நமது மாநிலத்தில் அமல்படுத்தப்போவது கிடையாது.
பிறகு வன்முறை ஏன் நடக்கிறது. அமைதியுடனும், கட்டுப்பாட்டுடனும் இருக்க வேண்டும் என அனைத்து மக்களிடமும் கேட்டுக் கொள்கிறேன். மதத்தின் பெயரால் எந்த அநீதியான நடவடிக்கையிலும் ஈடுபட வேண்டாம். அனைத்து மனித உயிர்களும் விலை மதிப்பற்றது. அரசியலுக்காக கலவரத்தை தூண்டி விடாதீர்கள். கலவரத்தை தூண்டுபவர்கள் சமூகத்திற்கு தீங்கு விளைவிக்கிறார்கள். இவ்வாறு அந்த அறிக்கையில் மம்தா கூறியுள்ளார்.

Advertisement