அதிகாரிகள் மாற்றத்தால் வரிவிதிப்பில் குளறுபடி: மாநகராட்சி கூட்டத்தில் துணை மேயர் ஆதங்கம்
திண்டுக்கல்:''அதிகாரிகள் மாற்றத்தால் வரிவிதிப்பில் குளறுபடி ஏற்படுவதாக '' திண்டுக்கல் மாநகராட்சி கூட்டத்தில் தி.மு.க., துணை மேயர் ராஜப்பா தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
இக்கூட்டம் மேயர் இளமதி (தி.மு.க.,) தலைமையில் நடந்தது.துணை மேயர் ராஜப்பா (தி.மு.க.,) , கமிஷனர் சிவக்குமார் முன்னிலை வகித்தனர். கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது.
கவுன்சிலர்கள் விவாதம்
ஜான்பீட்டர் (தி.மு.க., ): கோடைவெயில் வாட்டி எடுக்கிறது. முக்கிய பகுதிகளில் நீர்மோர் பந்தல் அமைக்க வேண்டும்.
தனபாலன் (பா.ஜ., ) : மாநகராட்சி வரி வசூல் மையத்தில் 7 கவுண்டர்கள் உள்ளதில் 2 தான் செயல்படுகிறது. மின்விசிறி கூட வேலை செய்யவில்லை.
ஆனந்த் ( தி.மு.க.,) : வரி வசூல் மையத்தில் முதியவர்களை காக்க வைக்க கூடாது. நாய்கள் முகாமிடுகின்றன.
இலியாஸ்( இ.மு.லீக்.,) : மாநகராட்சி வரி வசூல் பிரிவு மிகவும் மோசமாக உள்ளது. அதிக நபர்களுக்கு டபுள் என்ட்ரி முறையில் வரி விதிக்கப்படுகிறது. முறையாக அதிகாரிகள் பதில் சொல்வதில்லை. ஆரம்பம் முதலே வசூல் செய்யாமல் திடீரென வந்து சென்னை மக்களுக்கு வசூலிப்பதுபோல் ரூ.20 ஆயிரம் வரி என்கின்றனர். சென்னை அண்ணாநகர் போலவா திண்டுக்கல் உள்ளது.
(இதை தொடர்ந்து பேசிய தி.மு.க., கவுன்சிலர்கள் பெரும்பாலோனார் ,வரி விதிப்பு முறையில் டபுள் என்டரி அதிகளவில் இருக்கிறது. வரி வசூல் முகாம் நடத்துவது போல் குறைதீர் முகாம் நடத்தி பிரச்னைகளை சரி செய்து கொடுங்கள் என்றனர்.)
மேயர் : விரைவில் வரிவிதிப்பு குறித்த பிரச்னைகளை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பாஸ்கரன்(அ.தி.மு.க.,): கொசு ஒழிப்பு பணிக்காக ரூ.45 லட்சம் என தீர்மானம் உள்ளது. கோடை வெயிலில் கொசுவே இல்லை. இதற்கு இவ்வளவு நிதி தேவையில்லை.
சுபாஷினி, ஜான்பீட்டர், ஆனந்த் (தி.மு.க.,) ஜோதிபாசு, கணேசன் (மார்க்சிஸ்ட்) : அதிகாரிகள் முறையாக தங்கள் வார்டுகளில் வேலைகள் செய்வதில்லை. பல ஆண்டுகளாக திட்டங்கள் அனைத்தும் கிடப்பில் போடப்பட்டுள்ளது. அதிகாரிகள் ஆதிக்கம் அதிகமாக உள்ளது.
துணை மேயர்: அதிகப்படியான வேலைகள் தொய்வு ஏற்படுவதற்கு காரணமே கமிஷனர் உட்பட அதிகாரிகள் மாற்றப்படுவதே. இதனால் வரிவிதிப்பில் குளறுபடி ஏற்படுகிறது. கேட்டால் தற்போதுதான் வந்தோம் என அதிகாரிகள் அலட்சியப்போக்குடன் பதில் கூறுகின்றனர். இனி மேயரின் அனுமதி இல்லாமல் அதிகாரிகளை மாற்றக்கூடாது.
சுபாஷினி (தி.மு.க.,) : 2008 ல் தி.மு.க., ஆட்சியின் போது வழங்கப்பட்ட வீட்டுமனைப் பட்டாவிற்கு தற்போது வரை வரி ரசீது வழங்காமல் அலையவிடுகின்றனர். கேட்டால் ஆன்லைன் பட்டா கொண்டு வருங்கள் என்கின்றனர். ரசீது கொடுக்காததற்கான காரணம் என்ன.
ஜான்பீட்டர் ( தி.மு.க.,) : இலவச வீட்டுமனைப்பட்டாவிற்கான ரசீது கொடுப்பதில் அதிகாரிகளுக்கு என்ன சிக்கல். மாநகராட்சிக்கு கூடுதல் வருவாய் கிடைப்பதை ஏன் கெடுக்க வேண்டும்.
துணைமேயர் : மின்சாரம், குடிநீர் போன்ற அடிப்படை தேவைக்காகத்தானே மக்கள் வரி ரசீது கேட்கின்றனர். அவர்கள் இதை வைத்து என்ன செய்ய போகிறார்கள் .
கமிஷ்னர் : உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்படும்.
ஜான்பீட்டர் (தி.மு.க.,) : அண்ணா வணிக வளாகம் பூ மார்க்கெட் கட்டடத்தை இடிக்க கால அவகாசம் தேவை, மாற்று இடம் முறையாக ஒதுக்கப்பட வேண்டும்.
மார்த்தாண்டன் (தி.மு.க.,) : பூ மார்கெட் கடை உரிமையாளர்களை அழைத்து பேசாத காரணத்தினால் நீதிமன்றம் சென்று தடை உத்தரவு பெற உள்ளனர். அதிகாரிகள் அழைத்து பேச வேண்டும்.
கமிஷனர் : மாற்று இடம் கொடுக்க தயாராக இருக்கிறோம். பூ மார்கெட் கடை உரிமையாளர்கள் ஒத்துழைப்பு கொடுத்தால் போதும்.
தனபாலன் ( பா.ஜ., ): பூ மார்கெட் வியாபாரிகளை அழைத்து ஏன் பேச முயற்சிக்கவில்லை. நோட்டீஸ் மட்டும் அனுப்புகிறீர்கள். அவர்களை அழைத்து மேயர், துணை மேயர் அனைவரும் சேர்ந்து பேச வேண்டும்.
மேயர் : சில தினங்களில் பேச்சு வார்த்தை நடத்தி உரிய தீர்வு காணப்படும்.
துணை மேயர் : கால அவகாசத்தை நீட்டிக்கவும் முடிவு செய்யப்படும்.
மார்த்தாண்டன் (தி.மு.க.,), கணேசன் (மார்க்சிஸ்ட்) : திண்டுக்கல் மாநகராட்சியில் பாதாளசாக்கடை திட்டத்திற்கு ரூ. 160 கோடி ஒதுக்கப்பட்டு மாநகராட்சி கூட்டத்தில் வைக்காமல், வேலை அனுமதி வழங்கிய அதிகாரிகளின் செயல் விதிமுறைகளை மீறுவதாக உள்ளது.
கூட்ட துளிகள் ...
காங்., கவுன்சிலர் கார்த்திக் வக்ப் வாரிய திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக கருப்பு சட்டை அணிந்து வந்திருந்தார். மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றார். பா.ஜ., கவுன்சிலர் தனபாலன் ,ஊழல் ராகுல் மீது தீர்மானம் நிறைவேற்றலாமா என எதிர்ப்பு தெரிவித்ததோடு தீர்மானத்தை எப்படி கொண்டு வர முடியும் என வாதிட்டார்.
கவுன்சிலர்களுக்கு தெரியப்படுத்த வேண்டுமென்ற கட்டாயம் இல்லை என கமிஷனர் தெரிவிக்க, தி.மு.க.. கூட்டணி கவுன்சிலர்கள் வாக்குவாத்தில் ஈடுபட்டனர். அதிகாரிகள் எந்த பணிகளையும் மேற்கொள்ளக் கூடாது. கமிஷ்னர், கவுன்சிலர்கள் சொல்வதை ஏற்றுக் கொள்கிறேன் என கூற அமைதியாகினர்.