பெருமாள் கோயில் தெரு இருளில் மூழ்கியதால் பக்தர்கள் அவதி
சின்னமனூர்: சின்னமனூரில் லெட்சுமி நாராயண பெருமாள் கோயிலுக்கு செல்லும் வீதியில் தெரு விளக்குகள் பழுதாகி இருப்பதால், பெண்கள் மாலையில் கோயிலிற்கு அச்சத்துடன் சென்று வருகின்றனர்.
சின்னமனுார் நகராட்சியில் தெருவிளக்குகள் பராமரிப்பில் நகராட்சி போதிய கவனம் செலுத்துவதில்லை. விஸ்தரிப்பு பகுதிகளில் தெரு விளக்குகள் மாதத்திற்கு 10 நாட்கள் தான் எரிகிறது. மீதமுள்ள நாட்களில் பழுதான நிலையில் இருக்கும்.
கடந்த 2 நாட்களாக இங்குள்ள பிரசித்தி பெற்ற லெட்சுமி நாராயண பெருமாள் கோயிலிற்கு செல்லும் வீதியில், காந்தி சிலையில் இருந்து கோயில் வரை உள்ள தெரு விளக்குகள் பழுதடைந்து எரியாமல் உள்ளன. இதனால் இந்த வீதி இருளில் மூழ்கியுள்ளது .
பெருமாள் கோயிலிற்கு பெண்கள் பெரும்பாலும் மாலை 6 மணிக்கு - மேல் வருகின்றனர். இரவு 8.30 மணி வரை கூட்டம் இருக்கும். தெருக்கள் இருளில் மூழ்கி இருப்பதால் பெண்கள் அச்சத்துடன் செல்கின்றனர். நகராட்சியின் தெரு விளக்கு பராமரிப்பு மிக மோசமாக உள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.