பா.ஜ., தலைவர் வீட்டின் அருகே கையெறி குண்டு தாக்குதல்: பஞ்சாபில் பாகிஸ்தானியர் உள்பட இருவர் கைது

1

சண்டிகர்: பஞ்சாபில் பா.ஜ., தலைவர் வீட்டின் அருகே கையெறி குண்டு தாக்குதல் தொடர்பாக, பாகிஸ்தானியர் ஒருவர் உள்பட இருவர் கைது செய்யப்பட்டனர்.

பஞ்சாபில் ஜலந்தரில் பா.ஜ., தலைவரும் முன்னாள் அமைச்சருமான மனோரஞ்சன் காலியாவின் வீடு உள்ளது.இவரது வீட்டிற்கு வெளியே இன்று வெடிகுண்டு தாக்குதல் சம்பவம் நடந்தது. இது தொடர்பாக போலீசார் பாகிஸ்தானை சேர்ந்த ஒருவர் உள்பட இருவரை கைது செய்தனர்.

இது குறித்து பஞ்சாப் போலீஸ் உயர் அதிகாரி அர்பித் சுக்லா கூறியதாவது:

சம்பவம் அதிகாலை 1 மணியளவில் காலியாவின் வீட்டிற்கு வெளியே நடந்துள்ளது. அந்த நேரத்தில் முன்னாள் பஞ்சாப் அமைச்சர் அவரது வீட்டிற்குள் இருந்தார், ஆனால் அவருக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. தாக்குதல் நடத்திய நபர் ஒரு மின் ரிக்ஷாவில் வந்து, முதலில் வீட்டைக் கடந்து சென்ற பிறகு யூ-டர்ன் எடுத்து, பின்னர் கையெறி குண்டு வீசி, சம்பவ இடத்திலிருந்து தப்பிச் செல்வதை சி.சி.டி.வி, காட்சிகள் காட்டுகின்றன.

குண்டுவெடிப்பு நடந்த உடனேயே தடயவியல் குழு சம்பவ இடத்தை ஆய்வு செய்தது. தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட ஒரு ஆட்டோரிக்ஷா மீட்கப்பட்டுள்ளது. நாங்கள் மத்திய நிறுவனங்களுடன் தொடர்பில் இருக்கிறோம், தொடர்ந்து சோதனைகளை மேற்கொண்டு வருகிறோம். தடுப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.

கைது செய்யப்பட்டுள்ளவர்களான ஜீஷான் அக்தர் மற்றும் பாகிஸ்தானைச் சேர்ந்த ஷாஷெத் பட்டி ஆகியோர் இந்தத் தாக்குதலுக்குப் பின்னால் உள்ள முக்கிய சதிகாரர்கள்.
இந்த வழக்கு 12 மணி நேரத்திற்குள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது, இது சமூக நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் நோக்கில் பெரிய சதி ஆகும்.

தடைசெய்யப்பட்ட காலிஸ்தானி அமைப்பான பாப்பர் கல்சா இன்டர்நேஷனல் (பி.கே.ஐ) உடனான அவர்களின் தொடர்புகள் குறித்து விசாரித்து வருகிறோம்.

பா.ஜ.,தலைவர் மனோரஞ்சன் காலியா பாதுகாப்பாக உள்ளார், ஆனால் பஞ்சாப் மாநிலத்தில் பயங்கரவாத செயல்பாடுகள் அதிகரித்துள்ளன.

என்.ஐ.ஏ., மற்றும் பஞ்சாப் போலீசார் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

இவ்வாறு அர்பித் சுக்லா கூறினார்.

சம்பவம் குறித்து மனோரஞ்சன் காலியா கூறுகையில்,

ஆரம்பத்தில் பலத்த சத்தம் கேட்டபோது, டிரான்ஸ்பார்மர் வெடிப்பு அல்லது இடி,மின்னல் சத்தம் என நினைத்தேன். பின்னர் எனது வீட்டு வாசலில் இருந்த ஒருவர் தகவல் தெரிவித்த பிறகு அது ஒரு கையெறி குண்டு வெடிப்பு என்பதை உணர்ந்தேன்.

குண்டுவெடிப்பில் வீட்டின் கண்ணாடி ஜன்னல்கள், எஸ்.யு.வி கார் மற்றும் முற்றத்தில் இருந்த ஒரு மோட்டார் சைக்கிள் உடைந்தன என்றார்.

Advertisement