12 ஆயிரம் கிலோ புகையிலை பறிமுதல்; ரூ.2.15 கோடி அபராதம்
ஈரோடு: ஈரோடு மாவட்ட உணவு பாதுகாப்பு துறை மூலம், கடந்தாண்டு, 879 கடைகளில் நடந்த சோதனையில், 12 ஆயிரம் கிலோ அளவிலான புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, 2.15 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, ஈரோடு மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் தங்கவிக்னேஷ் கூறியதாவது:
உணவு பொருள் சார்ந்த சிறு தொழில்கள், கடைகள், ஆலைகள் உணவு பாதுகாப்பு துறை உரிமம் பெற்று செயல்படுத்த வேண்டும்.
மாநில அளவில், 19 சதவீதம், ஈரோடு மாவட்டத்தில், 31 சதவீதம் உரிம பதிவு செய்துள்ளனர். 'ரூகோ' எனப்படும் பயன்படுத்திய எண்ணெயை விலை கொடுத்து வாங்கி, அதன் மூலம் 'பயோ டீசலாக' மாற்றப்படுகிறது. இவ்வாறாக ஈரோடு மாவட்டத்தில் கடந்தாண்டு, 94 டன் ஆயில் கொள்முதல் செய்யப்பட்டு, 64 டன் 'பயோடீசலாக' மாற்றப்பட்டுள்ளது.
தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, பான் மசாலா, புகையிலை, நிக்கோடின் அடங்கிய பொருட்கள் விற்பனை
கண்காணிக்கப்படுகிறது. அவ்வாறு கடந்தாண்டு, 879 கடைகளில், 12 ஆயிரம் கிலோ அளவிலான புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அக்கடைகளுக்கு, 2.15 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
அரசால் தடை செய்யப்பட்ட, 14 வகையான பாலித்தீன் பொருட்களை உணவகங்கள், பேக்கரி, மளிகை, காய்கறி கடைகளில் பயன்படுத்துவதை ஆய்வு மூலம் கண்டறிந்து தடுக்கப்பட்டு வருகிறது. அவை பறிமுதல் செய்யப்பட்டு, அபராதம் விதிக்கப்படுகிறது.இதுபோன்ற புகார்களை, 94440 42322 என்ற எண்ணிலும், unavupukar@gmail.com என்ற மின்னஞ்சல் மூலமும், TN FOOD SAFETY CONSUMER APP என்ற செயலி மூலமும் தெரிவிக்கலாம்.
ஈரோடு மாவட்ட உணவு பாதுகாப்பு துறை சார்பில் உணவு பாதுகாப்பு பயிற்சி, சான்றிதழ் வழங்கும் திட்டத்தில் பயிற்சி தரப்படுகிறது. அவ்வாறு ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட பணியாளர்கள், கேட்டரிங் தொழில் செய்வோர் போன்றோருக்கு கடந்தாண்டு, 122 பயிற்சி வழங்கப்பட்டு, 4,200 பேர் பயன் பெற்றுள்ளனர்.
இவ்வாறு கூறினார்.