ரோட்டோர ஆக்கிரமிப்புகளால் போக்குவரத்து நெரிசல் கண்டுகொள்ளாத போலீசார்

கீழக்கரை : கீழக்கரை வள்ளல் சீதக்காதி ரோடு முதல் கடற்கரை செல்லும் ரோடு வரை அதிகளவில் ஆக்கிரமிப்புகள் உள்ளதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டும் போலீசார் கண்டுகொள்ளாமல் உள்ளனர்.

காலை, மாலை நேரங்களில் பள்ளி, கல்லுாரி செல்லக்கூடிய வேன்கள், டூவீலர்கள் உள்ளிட்ட வாகனங்களின் ஆக்கிரமிப்புகளால் தொடர் போக்குவரத்து நெரிசலை சந்திக்கின்றன.

கீழக்கரை நகராட்சி நிர்வாகத்தால் ஒதுக்கீடு செய்யப்பட்ட அளவை காட்டிலும் கூடுதலாக கடை விரித்து போக்குவரத்துக்கு இடையூறு செய்வோரால் அடிக்கடி அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

தன்னார்வலர்கள் கூறியதாவது: கீழக்கரை வள்ளல் சீதக்காதி சாலையில் இருந்து கடற்கரை வரை ரோட்டில் இருபுறங்களிலும் டூவீலர்கள், ஆட்டோக்கள், கனரக வாகனங்களை நிறுத்தி வைக்கின்றனர். இதனால் பள்ளி கல்லுாரிகளுக்கு செல்லும் நேரத்தில் போக்குவரத்தில் இடியாப்பச் சிக்கல் நிலவுகிறது.

கடைகளுக்கு முன்பாக வைக்கக்கூடிய விளம்பர பதாகைகள் மற்றும் போர்டுகளால் பெருமளவு பாதிப்பு ஏற்படுகிறது.

கீழக்கரை நகருக்குள் கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா வாகனங்கள் நகருக்குள் சென்று திரும்புகின்றன.

அச்சமயத்தில் ஒரு கி.மீ., உள்ள துாரத்தை கடக்க ஒரு மணி நேரத்திற்கு மேல் ஆகிறது.

எனவே சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றவும் எளிதாக அரசு டவுன் பஸ்கள் மற்றும் இதர கனரக வாகனங்கள் சென்று திரும்புவதற்கு ஏற்ற வகையில் உரிய வழிகாட்டுதலை கீழக்கரை நகராட்சி நிர்வாகம், போலீசார், வருவாய்த்துறை ஒன்றிணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Advertisement