சவுரவ் கோத்தாரி 'சாம்பியன்': உலக பில்லியர்ட்சில்

கார்லோ: உலக பில்லியர்ட்சில் இந்தியாவின் சவுரவ் கோத்தாரி சாம்பியன் பட்டம் வென்றார். பைனலில், சகவீரர் பங்கஜ் அத்வானியை வென்றார்.

அயர்லாந்தில், உலக பில்லியர்ட்ஸ் சாம்பியன்ஷிப் ('டைம் பார்மட்') தொடர் நடந்தது. இதன் பைனலில் இந்தியாவின் பங்கஜ் அத்வானி, சவுரவ் கோத்தாரி மோதினர். அபாரமாக ஆடிய சவுரவ் கோத்தாரி 725-480 என்ற கணக்கில் வெற்றி பெற்று, 'டைம் பார்மட்' பிரிவில் முதன்முறையாக உலக சாம்பியன் ஆனார். இது, இவரது 2வது உலக சாம்பியன் பட்டம். இதற்கு முன் 2018ல் இங்கிலாந்தின் லீட்சில் நடந்த உலக பில்லியர்ட்ஸ் தொடரில் கோப்பை வென்றிருந்தார்.

சர்வதேச பில்லியர்ஸ், ஸ்னுாக்கர் கூட்டமைப்பு (ஐ.பி.எஸ்.எப்.,), வேர்ல்டு பில்லியர்ட்ஸ் லிமிடெட் (டபிள்யு.பி.எல்.,) சார்பில் நடத்தப்பட்ட இரண்டு உலக பில்லியர்ட்ஸ் தொடரிலும் கோப்பை வென்ற 3வது இந்தியரானார் சவுரவ். ஏற்கனவே பங்கஜ் அத்வானி, ருபேஷ் ஷா இப்படி சாதித்தனர்.

பில்லியர்ட்ஸ் அரங்கில் முதன்முறையாக தந்தை-மகன் உலக சாம்பியன் ஆகினர். கடந்த 1990ல் பெங்களூருவில் நடந்த உலக பில்லியர்ட்ஸ் தொடரில் சவுரவ் தந்தை மனோஜ் கோத்தாரி கோப்பை வென்றிருந்தார்.
பங்கஜ் அத்வானி 2வது இடத்தை கைப்பற்றினார். மற்றொரு இந்திய வீரர் துருவ் சித்வாலா, 3வது இடம் பிடித்தார்.

Advertisement