ரயில்வே - ராணுவம் குஸ்தியால் ராமேஸ்வரத்திற்கு மின் ரயில் இல்லை

12

ராமேஸ்வரம்: ராமநாதபுரம் அருகே இந்திய கடற்படையின் ஐ.என்.எஸ்., பருந்து விமான தளம் விரிவாக்கம் செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால், ராமேஸ்வரத்திற்கு மின் ரயில் திட்டம் பாதிக்கப்பட்டுள்ளது.


பாம்பனில், 535 கோடி ரூபாயில் அமைத்த புதிய ரயில் பாலத்தை கடந்த 6ல் பிரதமர் மோடி திறந்து வைத்தார். புதிய பாலத்தில் மின்சார ரயில்கள் இயக்க மின்கம்பம், மின்கம்பிகள் பொருத்தி தயாராக உள்ளது. ஆனால், ராமேஸ்வரம் - ராமநாதபுரம் இடையே, 55 கி.மீ.,க்கு மின்சார கம்பங்கள் நடப்பட்ட நிலையில், ஓராண்டாகியும் மின் கம்பிகள் பொருத்தாமல் மின் இன்ஜின் ரயில் போக்குவரத்து முடங்கியுள்ளது.


ராமநாதபுரம் அருகே இந்திய கடற்படையின் ஐ.என்.எஸ்., பருந்து விமானப்படை தளம் உள்ளது. இதையொட்டி, 500 மீட்டர் துாரத்திற்கு தண்டவாளம் உள்ளது. கடல் பாதுகாப்பை பலப்படுத்த பருந்து விமான தளத்தை விரிவுபடுத்த, 450 ஏக்கர் கையகப்படுத்த கடற்படை முடிவு செய்தது. இதனால் விமானப்படை தளம் அருகே உள்ள தண்டவாளத்தை அகற்றி, 6 கி.மீ., சுற்றிச்செல்ல கடற்படை, ரயில்வே அமைச்சகத்திடம் வலியுறுத்தியது. ஆனால், சில நில உரிமையாளர்கள் நீதிமன்றத்தை அணுகியதால் நிலத்தை கையகப்படுத்த முடியவில்லை.


நிலத்தை கையகப்படுத்தி ரயில்வே வசம் விமானப்படை ஒப்படைத்தால் மட்டுமே, தண்டவாளத்தை மாற்றி அமைக்க முடியும். வழக்கு பிரச்னையால் அது தாமதாகிறது. புதிய வழித்தடம், மின் மயமாக்கல் பணிகளை தொடர முடியாமல் ரயில்வே தவிக்கிறது. தற்போது ராமேஸ்வரத்தில் இருந்து மதுரை, திருச்சி, திருப்பதி செல்லும் ரயில்கள் டீசல் இன்ஜினில் புறப்பட்டு, மதுரை உள்ளிட்ட நகரங்களில் மின் இன்ஜினுக்குமாற்றப்படுகின்றன.


ராமேஸ்வரம் - சென்னை ரயில்களில் திருச்சியில் மின் இன்ஜின் மாற்றப்படுகிறது. பிரதமர் துவக்கி வைத்த ராமேஸ்வரம் ரயில் பணிகள் முழுமையாக முடிவடைய வேண்டுமானால், விமானப்படை விரைவாக நிலத்தை கையகப்படுத்திக் கொடுத்தால் மட்டுமே முடியும்.

Advertisement