தகுதியான தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் எஸ்.பி., ஆபீசில் நியமிக்கப்படுவாரா?
கடலுார் மாவட்டத்தில் ஆங்காங்கே நடைபெறும் நிகழ்வுகள், பிரச்னைகளை உடனுக்குடன் மாவட்ட எஸ்.பி., க்கு நேரடியாக தகவல் அளிக்கப்பதற்காகத்தான் தனிப்பிரிவு என்ற அமைப்பு ஒன்று இயங்கி வருகிறது.
இதற்கு தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் தலைவராக இருப்பார். எஸ்.பி., யின் அனைத்து வாய்மொழி உத்தரவுகளும் தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் வழியாக அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும் பரவலாக்கப்படும்.
எஸ்.பி., வெளியூர், கூட்டம் என தலைமையிடத்தில் இல்லையென்றாலும் தனிப்பிரிவு இன்ஸ்பெக்டரே அனைத்து பணிகளையும் கவனித்துக்கொள்வது வழக்கம். அவ்வாறு பொறுப்புமிக்க பதவியாக கருதப்படும் இந்த இடத்தில் பணியாற்றிய செந்தில்விநாயகம் அண்மையில் அதிரடியாக மரக்காணத்திற்கு மாற்றம் செய்யப்பட்டார்.
அன்று முதல் இந்த பணியிடம் காலியாக உள்ளது. மாவட்ட குற்றப்பிரிவில் உள்ள இன்ஸ்பெக்டர் குருமூர்த்தி பொறுப்பு இன்ஸ்பெக்டராக உள்ளார்.
ஏற்கனவே உடல்நிலை சரியில்லாமல் இருந்து தேறி வரும் இன்ஸ்பெக்டருக்கு 2 பதவிகளில் பணியாற்றுவதால் 'ஓவர் டென்ஷன்' ஆக வாய்ப்புள்ளது.
எனவே தனிப்பிரிவு இடத்திற்கென தகுதி வாய்ந்த இன்ஸ்பெக்டரை உடனே நியமிக்க வேண்டும் என கோரிக்கை வலுத்து வருகிறது. இதே கோரிக்கையை பா.ம.க., வழக்கறிஞர் பாலுவும் முகநுால் மூலம் பதிவிட்டுள்ளார்.