கடலுார் சிப்காட்டில் காற்று, நீர் மாசுபாடு... அதிகரிப்பு; நோய் பரவலை தடுக்க நடவடிக்கை தேவை

கடலுார்: கடலுார் சிப்காட்டில் காற்று மாசு அதிகரித்து வருவதால், சுற்று வட்டார மக்கள் பல்வேறு உபாதைகளால் அவதிப்பட்டு வருகின்றனர்.
கடலுார் முதுநகர் பகுதியில் 1982ல் தொடங்கப்பட்ட சிப்காட் தொழிற்சாலைகள், தற்போது காற்று மாசு, குடிநீர் மாசால் கடும் சீர்கேடுகளை அளித்து வருவதால், சுற்று வட்டார மக்கள் பல்வேறு நோய்களுக்கு உள்ளாகின்றனர்.
சிப்காட் துவங்கும் போது 60க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் இருந்தன. இவையாவும் புதிய பொருளாதார கொள்கை காரணமாக படிப்படியாக காலியாகிவிட்டன. தற்போது 25 பெரிய தொழிற்சாலைகள் உள்ளன.
இவற்றில் பெரும்பாலானவை ரசாயன தொழிற்சாலைகள். இதில் இருந்து வெளியேறும் நச்சு காற்றால் பல்வேறு நோய்கள் ஏற்படுவதாக புகார் எழுந்துள்ளது. தமிழக அளவில் புற்று நோயாளர்கள் எண்ணிக்கையில் கடலுார் மாவட்டம் 2ம் இடத்தில் உள்ளது.
இதன்காரணமாக மாவட்டத்தில் புற்றுநோய் மருத்துவமனைகள் அதிகரித்து வருகின்றன. இதற்கு பல்வேறு காரணிகள் இருந்தாலும், தொழிற் சாலைகளில் இருந்து வெளியேறும் அபாயகரமான வாயுக்கள் ஒரு முக்கியம் என்கின்றனர் டாக்டர்கள்.
அதேப்போல் நிலத்தடி நீரும் நாளுக்கு நாள் மாசடைந்து வருகிறது. கடந்த காலங்களில் காரைக்காடு, குடிகாடு, சங்கொலிக்குப்பம், போன்ற கிராமங்களில் நிலத்தடி நீரையே குடிப்பதற்காக பயன்படுத்தினர்.
ஆனால் தற்போது இப்பகுதிகளில் நிலத்தடி நீர் மஞ்சள் நிரமாக மாறிவிட்டது. இந்த நீரை விவசாயத்திற்கு கூட பயன்படுத்த முடியவில்லை என கிராம மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
கடலுார் - சிதம்பரம் சாலையில் சிப்காட்டை கடக்கும்போது வரும் துர்நாற்றம் வயிற்றை புரட்டும் நிலையில் உள்ளது.
குறிப்பாக ஞாயிற்றுக்கிழமைகளில் அதிகளவு நச்சு வாயு திறந்து விடப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எந்த ரசாயன தொழிற்சாலையில் இருந்து இதுபோன்ற நச்சு வாயுவை வெளியேற்றுகின்றனர் என மாசுக் கட்டுப்பாடு வாரியத்திற்கு தெரியாமல் போனது எப்படி என பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
இதன் விளைவாக காற்று மாசு அதிகம் உள்ள நகரங்கள் பட்டியலில் கடலுார் 3ம் இடத்தில் உள்ளது. இந்தியாவில் உள்ள 100 நகரங்களில் 63 நகரங்கள் காற்று மாசால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன என அண்மையில் வெளியான புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
எனவே சிப்காட்டில் உள்ள ரசாயன கம்பெனிகள் தங்களது தொழிற்சாலை கழிவுகளை பொது சுத்திகரிப்பு நிலையம் மூலமாக சுத்திகரிப்பு செய்ய வேண்டும்.
அப்போதுதான் அபாய கரமான வாயுக்கள் காற்றில் கலப்பது கட்டுப்படுத் தப்படும்.