சாலையோரம் துாங்கும் லாரி டிரைவர்கள் போலீஸ் எச்சரித்தும் அலட்சியம்

விழுப்புரம-நாகப்பட்டினம் நான்கு வழிச்சாலையில் கடலுார் மாவட்டம் ஆலப்பாக்கம் முதல் கொத்தட்டை வரை, புதுச்சத்திரம் போலீஸ் நிலைய எல்லையாக உள்ளது. சட்டம் ஒழுங்கு பிரச்னை, திருட்டு சம்பவங்கள் நடப்பதை தடுக்க போலீசார், இரவு நேரங்களில் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மணல், ஜல்லி உள்ளிட்டவைகளை ஏற்றி வரும் கனரக லாரி ஓட்டுனரகள் நள்ளிரவு நேரங்களில் வாகனங்களை சாலையோரமாக நிறுத்திவிட்டு துாங்குகின்றனர். தனியே இருக்கும் லாரி டிரைவர்களை, மர்ம நபர்கள் மிரட்டி கொள்ளையடித்தச்செல்வது வாடிக்கையாக உள்ளது. ரோந்து செல்லும் போலீசார், லாரி டிரைவர்களிடம் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிகளில் லாரிகளை நிறுத்த வேண்டாம். பாதுகாப்பான இடங்களில் நிறுத்திவிட்டு துாங்குங்கள் என அறிவுறுத்திச் செல்கின்றனர்.

ஆனாலும், லாரி ஓட்டுனர்கள் போலீசாரின் அறிவுரையை ஏற்காமல் அலட்சியம் செய்கின்றனர். கடந்த 2ம் தேதி, அதிகாலை 6 பேர் கொண்ட கும்பல், 2 லாரி டிரைவர்களை மிரட்டி பணம், மொபைல் போனை திருடிச்சென்றது.

மாவட்ட போலீசார் துரிதமாக செயல்பட்டு, 6 பேர் கும்பலை கைது செய்ததுடன், போலீசாரை வெட்டிவிட்டு தப்பிக்க முயன்ற ரவுடி விஜய்யை என்கவுன்டரில் சுட்டுக்கொன்றனர். தற்போதும் ஒரு சில லாரி டிரைவர்கள், தனியாக லாரியை நிறுத்திவிட்டு துாங்கும் நிலை தொடர்வதால் போலீசார் அவர்களை எச்சரித்து அனுப்புகின்றனர்.

Advertisement