கடலுாரில் உளவுத்துறை அலர்ட் எதிரொலி ; தி.மு.க., அதிருப்தி கவுன்சிலர்களுக்கு 'ஜாக்பாட்'

கடலுாரில் உளவுத்துறை தகவலால் அதிருப்தி கவுன்சிலர்களுக்கு 'ஜாக்பாட்' அடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. கடலுார் மாநகராட்சியில் 2 மாதத்திற்கு ஒரு முறை தான் மாநகராட்சி கூட்டம் நடத்தப்படுவது வழக்கம்.

துவக்கத்தில் இருந்தே தி.மு.க., அமைச்சர் ஆதரவு கவுன்சிலர்கள், எம்.எல்.ஏ., ஆதரவு கவுன்சிலர்கள் என 2 பிரிவாக செயல்பட்டு வந்தனர்.

இதனால் எல்லா கூட்டத்திற்கும் போலீஸ் பாதுகாப்பு இல்லாமல் கூட்டம் நடந்ததே இல்லை. இப்பிரச்னை கட்சி மேலிடத்திற்கு சென்றதால் இரு அணிகளையும் ஒருங்கிணைக்குமாறு கட்சி மேலிடம் பணித்தது. அதன்படி இரு அணிகளையும் ஒருங்கிணைப்பதற்குள்ளாகவே முக்கால்வாசி நாட்கள் கடந்துவிட்டன.

இனி இருப்பது குறுகிய காலம்தான். அதற்குள் செலவு செய்த தொகையாவது சம்பாதிக்க முடியுமா என்கிற கேள்வி அவர்களுக்குள் எழுந்துள்ளது. இப்பிரச்னை வரும் கூட்டத்தில் எதிரொலிக்கும் என உளவுத்துறை, அமைச்சரின் வாரிசிடம் தகவல் கூறியுள்ளனர்.

அதையொட்டி அதிருப்தியில் உள்ள கவுன்சிலர்களை 'கவனித்து' சரி கட்டி கூட்டத்தை பிரச்னையில்லாமல் நடத்தி செல்லலாம் என திட்டமிட்டுள்ளனர். எனவே உளவுத்துறையால் அதிருப்தி கவுன்சிலர்களுக்கு 'ஜாக்பாட்' அடிக்கும் வாய்ப்புள்ளது.

Advertisement