புலியை பார்த்த காட்டுயானை கூட்டம் அரண் அமைத்து குட்டிக்கு பாதுகாப்பு

மூணாறு : மூணாறு அருகே புலியின் நடமாட்டத்தை பார்த்த காட்டு யானை கூட்டம் அரண் அமைத்து குட்டியை பாதுகாத்து வருகிறது.
மூணாறு அருகே இரவிகுளம் தேசிய பூங்காவுக்கு உட்பட்ட ராஜமலைக்கு செல்லும் நுழைவு பகுதியான 5ம் மைல், மூணாறு, உடுமலைபேட்டை ரோட்டில் ஏழு கி.மீ., தொலைவில் உள்ளது. அதன் எதிரில் உள்ள தேயிலை தோட்டத்தில் மூன்று மாதங்கள் வளர்ச்சியுள்ள குட்டி உள்பட ஆறு யானைகளை கொண்ட கூட்டம் நேற்று முன்தினம் முகாமிட்டுள்ளன. அவை அரண்கள் போன்று நின்று குட்டியை பாதுகாப்பதையும், அருகில் உள்ள சோலை வனத்தினுள் செல்வதை தவிர்ப்பதையும் பார்த்த வனத்துறையினர் யானைகளை கண்காணித்தனர். அதில் தேயிலை தோட்டத்தின் அருகில் உள்ள சோலை வனத்தில் புலியின் நடமாட்டத்தை பார்த்த யானைகள் குட்டியை அரண் அமைத்து பாதுகாப்பதாக தெரியவந்தது. கடந்த இரண்டு நாட்களாக தேயிலை தோட்டத்தில் முகாமிட்ட யானைகளை ராஜமலையின் நுழைவு பகுதியான 5ம் மைலில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்தனர். யானைகளை தொடர்ந்து கண்காணித்து வருவதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.