ஆன்லைன், உள்ளூர் டாக்சி டிரைவர்கள் மோதல் அதிகரிப்பு

மூணாறு : ஆன்லைன், உள்ளூர் டாக்சி டிரைவர்கள் இடையே மோதல் அதிகரித்து வருகிறது.

கேரளாவில் பிற பகுதிகளில் இருந்து மூணாறுக்கு வரும் ஆன்லைன் டாக்சிகளில் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட குறைந்த கட்டணம் வசூலிப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதனால் உள்ளூர் டாக்சி டிரைவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதால் இரு தரப்பினர் இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வருகிறது.

தாக்குதல்: நெடும்பாசேரியைச் சேர்ந்தவர் ஆன்லைன் டாக்சி டிரைவர் சுவப்னேஷ் 45. இவர் நேற்று முன்தினம் மூணாறு அருகே பயணிகளை இறக்கி விட்டு குறைந்த கட்டணத்தில் வேறு பகுதிக்கு சவாரி சென்றார். ஆனச்சால் பகுதியில் சென்ற காரை உள்ளூர் டாக்சி டிரைவர்கள் தடுத்து நிறுத்தியதால் பிரச்னை ஏற்பட்டது. போலீசார் தலையிட்டு பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்தனர்.

அதன்பின் சித்திராபுரம் பகுதியில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் இரவில் காரை நிறுத்தி விட்டு சுவப்னேஷ் ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தார். அங்கு வந்த கும்பல் காரை அடித்து நொறுக்கியதுடன் சுவப்னேஷை தாக்கியதால் பலத்த காயம் அடைந்தார். அவரை விடுதி ஊழியர்கள் மருத்துவமனையில் அனுமதித்தனர். வெள்ளத்தூவல் போலீசார் விசாரிக்கின்றனர். இது போன்று கடந்த இரண்டு மாதத்தில் ஐந்து சம்பவங்கள் நடந்தது குறிப்பிடதக்கது.

Advertisement