எதெல்லாம் தடை செய்யப்பட்ட நிலம்: 'சர்வே' எண்களை வெளியிட பதிவுத்துறை திட்டம்

13

சென்னை: நீர் நிலை, கோயில் போன்ற தடை செய்யப்பட்ட நிலங்களின், 'சர்வே' எண் விபரங்களை, அந்தந்த சார் பதிவாளர் அலுவலகங்களில் வெளியிடுவதற்கான வழிமுறைகளை, பதிவுத் துறை ஆராய்ந்து வருகிறது.


தமிழகத்தில் நீர் நிலைகள், கோவில் நிலங்களை பத்திரப்பதிவு செய்ய தடை உள்ளது. எந்தெந்த சர்வே எண்களுக்கு உட்பட்ட நிலங்களுக்கு, இத்தடை பொருந்தும் என்ற விபரங்கள் வெளிப்படையாக இல்லை. இதனால், பொது மக்கள் போதிய விழிப்புணர்வு இன்றி, நீர் நிலை ஆக்கிரமிப்பு நிலங்களையும், கோயில் நிலங்களையும் வாங்கி ஏமாறுகின்றனர்.


இது குறித்த விபரங்கள், வருவாய் துறையில் இருந்து பதிவுத் துறைக்கு வழங்கப்பட்டுள்ளன. அந்தந்த சார் பதிவாளரிடம் இந்த விபரங்கள் இருந்தாலும், பணிப்பளு காரணமாக, பொது மக்களுக்கு தகவல் தெரிவிப்பது இல்லை. இதனால், வீடு, மனைகளை வாங்கும் மக்கள், பிற்காலத்தில் சொத்தை இழக்கும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.


இதுகுறித்து, ரியல் எஸ்டேட் சொத்து மதிப்பீட்டாளர் பி.பாலமுருகன் கூறியதாவது:

சென்னை, பள்ளிக்கரணையில் சதுப்பு நிலம் மற்றும் நீர் நிலை வகைப்பாட்டில் வரும் நிலங்களின் சர்வே எண்கள், சம்பந்தப்பட்ட சார் பதிவாளர் அலுவலகங்களில் வெளியிடப்பட்டன. நீதிமன்ற உத்தரவு அடிப்படையில், இந்நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதனால், இந்த குறிப்பிட்ட அலுவலகங்களில் பத்திரப்பதிவுக்கு செல்லும் மக்கள், தடை செய்யப்பட்ட சர்வே எண்கள் குறித்த விபரங்களை எளிதாக அறிய முடிகிறது. ஆனால், பிற பகுதிகளில் இதுபோன்ற நடவடிக்கைகள் இல்லை.


ஒவ்வொரு சார் பதிவாளர் அலுவலகத்திலும், அதன் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில், தடை செய்யப்பட்ட நிலங்களின் சர்வே எண் விபரங்களை வெளியிட வேண்டும். அப்போதுதான் பொது மக்கள், நீர் நிலைகள், கோயில் நிலங்களை வாங்குவதை தவிர்ப்பர். இவ்வாறு அவர் கூறினார்.


இதுகுறித்து, பதிவுத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: நீதிமன்ற உத்தரவுப்படி, குறிப்பிட்ட சில சார் பதிவாளர் அலுவலகங்களில் மட்டும், தடை செய்யப்பட்ட நிலங்கள் குறித்த விபரங்கள் வெளியிடப்படுகின்றன. அனைத்து அலுவலகங்களிலும், இந்த நடைமுறையை விரிவாக்கம் செய்ய, கோரிக்கைகள் வந்துள்ளன.


இந்த விஷயத்தில், அந்தந்த சார் பதிவாளர்கள் உரிய நடவடிக்கை எடுக்கலாம். வருவாய்த் துறையிடம் இருந்து, சரியான விபரங்களை பெற்று வெளியிடுவதால், பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement