உள்துறை அமைச்சராக விரும்பிய சேஷன் : காந்தி பேரனின் புத்தகத்தில் புது தகவல்

புதுடில்லி : முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை செய்யப்பட்டதும் மத்திய உள்துறை அமைச்சர் பொறுப்பை ஏற்க, மறைந்த முன்னாள் தலைமை தேர்தல் கமிஷனர் டி.என்.சேஷன் விரும்பியதாக, காந்தியின் பேரனும் மேற்கு வங்க முன்னாள் கவர்னருமான கோபால கிருஷ்ண காந்தி எழுதிய புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த, 1991-ல் லோக்சபா தேர்தல் அறிவிக்கப்பட்டபோது, தலைமை தேர்தல் கமிஷனராக இருந்தவர் டி.என்.சேஷன். அப்போது, தமிழகத்துக்கு பிரசாரத்துக்கு வந்த ராஜிவ், ஸ்ரீபெரும்புதுாரில் விடுதலைப்புலிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில், 1991, மே 21-ல் கொல்லப்பட்டார்.
இதைத் தொடர்ந்து நடந்த நிகழ்வுகளை காந்தியின் பேரனும் மேற்கு வங்க முன்னாள் கவர்னருமான கோபால கிருஷ்ண காந்தி, 'தி அண்டையிங் லைட்: எ பெர்சனல் ஹிஸ்டரி ஆப் இண்டிபெண்டென்ட் இண்டியா' என்ற தன் புத்தகத்தில் எழுதியுள்ளார்.
அதன் விபரம்:
ராஜிவ் கொலையான தகவலை, அன்றைய ஜனாதிபதி ஆர்.வெங்கட்ராமனுக்கு முதலில் தெரிவித்தவர், டி.என்.சேஷன். அன்று நள்ளிரவிலேயே ஜனாதிபதி மாளிகைக்கு வேகமாக வந்தார்.
அங்கு, ஜனாதிபதியுடன் நானும், ஜனாதிபதியின் செயலர் பி.முராரியும் இருந்தோம். 12 அடி தொலைவில் இருந்தபடியே, அவசரமாகவும், கிசுகிசுப்பாகவும், கண்களை விரித்தபடியும் சேஷன் பேசத் துவங்கினார்.
'லோக்சபா தேர்தலை உடனே நிறுத்த வேண்டும்; நாட்டின் பாதுகாப்பை மிகக் கடுமையான கட்டுப்பாட்டின் கீழ், மிக விரைவாக கொண்டு வர வேண்டும் என, நினைக்கிறேன். இந்த சூழ்நிலையில், தலைமை தேர்தல் கமிஷனர் பதவிக்கும் மேலாக வேறு ஏதேனும் பங்காற்ற தயாராக இருக்கிறேன்.
'உள்துறை அமைச்சருக்கு பொருத்தமாக இருப்பேன் என ஜனாதிபதி கருதினால், அமைச்சராகவும் என்னால் பணியாற்ற முடியும்' என சேஷன் கூறினார்.
ஆனால், அவரது ஆலோசனைகள் பரிசீலிக்கப்படவில்லை. சிறிது நேரத்திலேயே, அங்கு வந்த பிரதமர் சந்திரசேகர், மத்திய அமைச்சரவை செயலர் நரேஷ் சந்திரா ஆகியோர், 'பதற்றத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
'எந்த பீதியும் தேவையில்லை, தேர்தலை நிறுத்த வேண்டிய அவசியமும் இல்லை' என ஜனாதிபதியிடம் உறுதி அளித்தனர்.
இதையடுத்து, 'நிலைமையை முழுமையாக கையாளும் அரசின் தலைவரான பிரதமரே நம்பிக்கையுடன் இருக்கிறார். எந்தவொரு உள் மற்றும் வெளிவிவகாரங்களை அவர் எதிர்கொள்வார். இந்தியா பாதுகாப்பாக இருக்கிறது' என தலைமை தேர்தல் கமிஷனர் டி.என்.சேஷனிடம் ஜனாதிபதி வெங்கட்ராமன் கூறினார்.
இதனால், லோக்சபா தேர்தல் ரத்து செய்யப்படவில்லை. இரண்டு மற்றும் மூன்றாம் கட்ட ஓட்டுப்பதிவுகள் மட்டும் 1991ம் ஆண்டு ஜுன் 12, 15 தேதிகளுக்கு ஒத்தி வைக்கப்பட்டது. முதற்கட்ட தேர்தல், ராஜிவ் கொலைக்கு முன்தினமான மே 20-ல் நடந்தது.
இவ்வாறு அந்த புத்தகத்தில் கூறப்பட்டுள்ளது.











மேலும்
-
சிறுபான்மையினர் பாதுகாப்பை உறுதி செய்யுங்கள்: வங்கதேசத்திற்கு இந்தியா கண்டனம்
-
ஏப்.,22ல் சவுதி அரேபியா செல்கிறார் மோடி!
-
ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: டில்லி, ஜம்மு காஷ்மீரில் குலுங்கிய கட்டடங்கள்
-
சுற்றுலா பயணிகள், பக்தர்களை குறிவைத்து மோசடி; உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை
-
தமிழகத்தில் கைவினைத்திட்டம்: துவக்கினார் முதல்வர் ஸ்டாலின்
-
ஹிந்து பெண்கள் மீது மனித தன்மையற்ற தாக்குதல்; தேசிய மகளிர் கமிஷன் கண்டனம்